சீன நிறுவனங்களை கண்டு டாடா மோட்டார்ஸ் அஞ்சுமா?
புதிய மின்சார வாகன கொள்கையை அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களான டெஸ்லா, இந்தியாவில் தனது உற்பத்தியை தொடங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. புதிய கொள்கை காரணமாக சுங்க வரி வெகுவாக குறைய இருக்கிறது. அதாவது 8 ஆயிரம் மின்சார கார்களை தயாரிக்கும் நிறுவனங்கள் ஆலை அமைக்க 15 விழுக்காடு மட்டுமே சுங்க வரியாகும்.இதனால் டெஸ்லா இந்தியாவில் கார் ஆலையை அமைப்பது உறுதியாகியுள்ளது. தற்போது சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தான் கோலோச்சி வருகிறது. இந்திய அரசின் கொள்கைகளால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலை தான் இன்னும் விரிவடைய இருக்கிறது. இந்திய மின்சார கார்கள் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு மட்டுமே 79 விழுக்காடுக்கும் அதிகமாக இருக்கிறது. ஏனெனில் டாடாவில் டியாகோ, நெக்சான், டிகோர், பஞ்ச் என அடுத்தடுத்து பல வாகனங்கள் உள்ளன. விரைவில் ஹாரியர் வகை காரிலும் மின்சார கார் வருகிறது. இறக்குமதி வரியை குறைக்க வேண்டாம் என்று டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே மத்திய அரசை கேட்டுக்கொண்டது. அப்படி செய்தால் உள்ளூர் சந்தை பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தது. இதனிடையே ஜிடிஆர்ஐ என்ற அமைப்பும் மத்திய அரசை வேறு வகையில் எச்சரித்து இருந்தது. புதிய மின்சார வாகன கொள்கையால் சீன நிறுவனங்கள் இந்தியாவில் அதிகம் ஊடுருவும் என்பதே அந்த எச்சரிக்கையாகும். ஏற்கனவே இந்தியாவிற்குள் சீன நிறுவனமான பிஒய்டி நுழைந்துவிட்டது. இந்த கார் 90 விழுக்காடு சந்தையை இந்தாண்டு இறுதிக்குள் பிடிக்க திட்டமிட்டுள்ளது. அண்மையில் மின்சார செடான் ரக கார்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அட்டோ3, ஈ2 வகை பிரீமியம் கார்களையும் இறக்கியுள்ளது.
40ஆயிரம் முதல் 70 ஆயிரம் டாலர்கள் வரை டெஸ்லா கார்கள் விற்பனை செய்யப்படும் அதே நேரத்தில் விலை குறைவாகவும்,அதிக வசதிகளுடன் பிஒய்டி கார்களை இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் கார்கள் மட்டும் தான் மின்சார வகைகளில் 15 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின்றன. இதற்கு அடுத்த இடத்தில் மகேந்திரா எக்ஸ் யுவி நிறுவன கார் 16 லட்சம் ரூபாயாக இருக்கிறது. இதனால் இந்த வகை நிறுவனங்கள் டெஸ்லாவை கண்டு பயம் கொள்ளவில்லை. அதே நேரம் சீன நிறுவனங்கள் விலை குறைவாகவும் அதே நேரம் அதிக வசதிகளையும் அளிக்க உள்ளன. அண்மையில் சியோமி நிறுவனம் தனது எஸ் யு 7 என்ற மின்சார காரை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதே கார் இந்தியாவில் விற்பனையானால் வெறும் 25லட்சம் ரூபாய் தான். எனவே செல்போன் சந்தையைப்போல மின்சார கார்சந்தையிலும் சீன நிறுவனங்கள் ஆதிக்கம் அதிகரித்துவிடும், எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கவலைப்பட அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.