மெட்டா இந்தியாவின் முதல் தரவு மையம் தமிழ்நாட்டில்..
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, இந்தியாவில் தனது புதிய தரவு மையத்தை திறக்க இருக்கிறது. இந்த மையம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சென்னை அலுவலகத்தில் அமைய இருக்கிறது. இந்தியாவில் உள்ள மக்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் செயலிகளில் மக்கள் பகிரும் தரவுகள் இனி சிங்கப்பூருக்கு சென்று மீண்டும் இந்தியாவுக்கு திரும்பாது. எத்தனை கோடி ரூபாய் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை, சென்னையிலேயே தரவு மையங்களை அமைத்து இந்தியாவின் பல்வேறு மூலைகளில் இருந்து பெறப்படும் தரவுகள் உடனுக்குடன் அனுப்பும் வகையில் இந்த புதிய தரவு மையம் செயல்பட இருக்கிறது. இங்கிருந்து பதிவேற்றப்படும் தரவுகள் சிங்கப்பூர் சென்று அங்கிருந்து திரும்புவதை தடுக்கும் நோக்கில் இந்த புதிய மையம் அமைய இருக்கிறது. இதனால் பேஸ்புக் நிறுவனத்துக்கு செலவும் கணிசமாக குறைய இருக்கிறது. சென்னை அம்பத்தூரில் உள்ள தொழில்பேட்டையில் 10 ஏக்கர் பரப்பளவில் இந்த மையம் அமைய இருக்கிறது. புரூக்பீல்ட் அசெட் மேனேஜ்மெண்ட் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிஜிட்டர் ரியாலிட்டி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த மையத்தை பராமரிக்க இருக்கின்றன. 100 மெகாவாட் அளவுக்கு தகவல் தொழில்நுட்ப லோடை இந்த மையம் தாங்க இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை உள்ளூரிலேயே செயல்படுத்த இருப்பதால் உயர்நிலை பாதுகாப்பு அளிக்கப்பட இருக்கிறது. சென்னையைத் போலவே மும்பை, ஐதராபாத், டெல்லிஉள்ளிட்ட பகுதிகளிலும் தரவு மையங்களை மெட்டா நிறுவனம் திறக்க இருக்கிறது. இந்தியாவில் 31 கோடி 46 லட்சம் பேர் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். அதே போல் 35 கோடி பேர் இன்ஸ்டாகிராம் மற்றும் 48 கோடி பேர் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். அடுத்த 3 ஆண்டுகளில் தரவு மையங்கள் சார்ந்த வணிகம் இரண்டு மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ்புக்கை போலவே கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனமும் நவி மும்பையில் 22.5 ஏக்கர் இடப்பரப்பில் தரவு மையங்களை அமைக்க திட்டமிட்டு வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.