பொதுத்துறை வங்கி பணியாளர்கள் கவனத்துக்கு..
பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் தகுதியுள்ள பணியாளர்களுக்கு அந்த நிறுவனத்தின் பங்குகளையே அளிப்பது குறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் நிலையில் இது குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவெடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு நெறிமுறைகள் விரைவில் வகுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வங்கி நிறுவனங்கள் டெலாய்ட் நிறுவனத்திடம் இருந்து ஆலோசனைகள் பெற்றதாக கூறப்படுகிறது. வங்கிகளே பேசி ஒரு முடிவுக்கு வரும் வரையில் காத்திருப்போம் என்று விவரம் அறிந்த அதிகாரி ஒருவர் கூறுகிறார். தனியார் வங்கிகளின் பக்கம் அனைத்து இளைஞர்களும் சென்றுகொண்டிருக்கும் இந்த நேரத்தில் பொதுத்துறை வங்கிப்பணியாளர்களுக்கு பங்குகள் வழங்கும் முடிவு , அரசு வங்கிப்பணியில் சேர்வோருக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. esop எனப்படும் பங்குகளை வழங்குவது குறித்து கடந்த 2020ஆம் ஆண்டே மத்திய அரசு பேச்சுவார்த்தையில் இறங்கியது. ஆனால் தவிர்க்க முடியாத காரணிகளால் அந்த பேச்சுவார்த்தை கிடப்பில் போடப்பட்டது. 2015 ஆம் ஆண்டே இந்திர தனுசு என்ற பிரேம்ஒர்க்கை மத்திய அரசு கட்டமைத்தது. அதில் பொதுத்துறை நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் இருப்போருக்கு esopகளை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிகாலத்தில் பொதுத்துறை வங்கிப்பணியாளர்களுக்கு மலிவு விலையில் பங்குகளை அளிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது,ஆனால் போதிய வரவேற்பு அப்போது இல்லாததால் இந்த திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது