7 ஆவது முறையும் மாற்றமில்லையா?
வங்கிகளுக்கு கடன் தரும் ரிசர்வ் வங்கி தனது நிதி கொள்கைக்கூட்டத்தில் ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் அதே நிலையில் தொடர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் வட்டி விகிதத்துக்கு ஆங்கிலத்தில் ரெபோ ரேட் என்று பெயர். இந்த விகிதம் கடந்த 6 கூட்டங்களாக மாற்றப்படாமல் அப்படியே தொடர்கிறது. இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் கூட்டம் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது. இது பற்றிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் வெளியிட்டார். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடுமையான வெப்ப அலைகள், ஆங்காங்கே பெய்த கனமழை உள்ளிட்டவையும் நிதி கொள்கை கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்களாக கூறப்படுகிறது.
இன்னும் சிலரோ ஆகஸ்ட் வரை எந்த பெரிய மாற்றமும் இருக்காது என்று தெரிவிக்கின்றனர். பருவமழையை பொருத்தே மத்திய ரிசர்வ் வங்கியின் மாற்றம் இருக்கும் என்கிறார் மற்றொரு நிபுணர். ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, பணவீக்கம் 4 விழுக்காடாக குறைக்கப்பட வேண்டும் என்பதேஇலக்காகஇருந்தாலும், வறட்சி ஏற்பட்டால் பொருட்களின் விலைகள் கடுமையாக உயரும் என்ற அச்சம் காரணமாக கடன்கள் மீதான வட்டி விகிதம் மாற்றப்பட வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது. இந்திய நாட்டின் உற்பத்தி மற்றும் வளர்ச்சியின் அளவு 7 விழுக்காடாக வளரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அதேநேரம் கடந்த முறை நடந்த நிதி கொள்கை கூட்டத்தில் வரும் நிதியாண்டில் விலைவாசி உயர்வை, பணவீக்கத்தை 4.5%ஆக வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.