அதகளப்படுத்தும் அதானி…,
அதானி குழுமம் அண்மையில் சோலார் செல்கள் தயாரிக்க தேவையான வேஃபர் மற்றும் இன்கோட்ஸ்களின் உற்பத்தியில் இறங்கியிருக்கிறது. 2027-28 காலகட்டத்தில் அந்த ஆலை பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான ஆலை குஜராத்தில் இயங்க இருக்கிறது. இந்த ஆலை பயன்பாட்டுக்கு வந்தால் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த புதுப்பிக்கத் தக்க ஆற்றல் நிறுவனமாக மாறிவிடும். குறிப்பிட்ட அந்த ஆலையில்2030-ல் 45 ஜிகாவாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானை ஒட்டியுள்ள கவ்டா புதுப்பிக்கத் தக்க ஆற்றல் பூங்காவில் இருப்பதை விட 3-ல் இரண்டு பங்கு அளவுக்கு உற்பத்தி செய்ய இருப்பதாக கவுதம் அதானி கூறியுள்ளார். பிரதமர் மோடியின் கனவான 2070 ஆம் ஆண்டுக்குள் இந்தியா கரியமில வாயு வெளியேற்றாத நாடாக வேண்டும் என்ற எண்ணத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இப்போது வரை சீனா தான் அதிகளவில் சோலார் வேஃபர்களை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் அதானி குழுமம் அதிகளவில் பாலிசிலிக்கானை இறக்குமதி செய்து இந்தியாவிலேயே உற்பத்தியை தொடங்க இருக்கிறது. ஏற்கனவே குஜராத்தின் முந்த்ரா பகுதியில் ஒரு துறைமுக நகரம் அமைக்க 3.60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், காற்றாலை மின்சார உற்பத்திக்கு இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பிட்ட ஆலை ஏற்கனவே அமெரிக்காவுக்கு 4 ஜிகா வாட் அளவுள்ள சோலார் செல்களை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. இதனை மேலும் 10 ஜிகாவாட்டாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. கவ்டா பகுதியில் உள்ள ஆற்றல் தயாரிப்பு நிலையத்தில் 6ஜிகாவாட் அளவுக்கு 2025 மார்ச் மாதத்தில் உற்பத்தி செய்யப்படும் என்றும். அதானி குழும அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.