அமெரிக்காவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை..
அமெரிக்காவில் வேலைவாய்ப்பில்லாமல் கஷ்டப்படுவோரின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாகியுள்ளதாக புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்திருக்கிறது. ஏப்ரல் 6 ஆம் தேதி வரை வேலைவாய்ப்பில்லாமல் அரசின் உதவியை அமெரிக்காவில் எதிர்பார்ப்போரின் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரம் பேராக உயர்ந்திருக்கிறது. வேலைவாய்ப்பின்மை உயர பல்வேறு காரணிகள் அமெரிக்காவில் உள்ளன. குறிப்பாக ஈஸ்டர், அரசுப்பள்ளியில் நேர மாற்றம் உள்ளிட்டவை காரணிகளாக கூறப்படுகிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை5.25 விழுக்காடாகவே தொடர்ந்து வருகிறது. வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.8 விழுக்காட்டில் இருந்து 0.1 விழுக்காடு உயர்ந்து 3.9%ஆக இருக்கிறது. அமெரிக்காவில் விலைவாசியை கட்டுப்படுத்த கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்காமல் அதே அளவாகவே பெடரல் ரிசர்வ் வைத்துள்ளது. இந்நிலையில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதும், விலைவாசி உயர்வை அதே நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் வரும் ஜூன் மாதத்தில் கடன்கள் மீதான வட்டி விகிதங்களை அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அரசு தரும் உதவிகளை பெறுவோரின் எண்ணிக்கை 18 லட்சமாக மார்ச் 30 ஆம் தேதி வரை இருப்பதாக அந்நாட்டு தொழிலாளர் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.