டிவிடண்ட் தர தயாராகும் ரிலையன்ஸ்.,
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மார்ச் மாதம் வரையிலான காலாண்டு முடிவுகளை அதாவது 4 ஆவது காலாண்டு முடிவுகளை வரும் 22 ஆம் தேதி வெளியிட உள்ளது. அதே நாளில் எவ்வளவு டிவிடண்ட் தரலாம் என்பதை அந்நிறுவன இயக்குநர்கள் குழு முடிவெடுக்க இருக்கிறது. 2023-24 நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் அளிக்கும் இரண்டாவது டிவிடண்ட் இதுவாகும். கடந்த ஜூன் மாதத்தில் ஒரு பங்குக்கு 9 ரூபாய் டிவிடண்ட் அறிவிக்கப்பட்டது. அந்த தொகை கடந்தாண்டு ஜூலை மாதத்தில் அளிக்கப்பட்டது. கடந்த மே 2022-ல் 8 ரூபாய் டிவிடண்ட் அந்நிறுவனம் அறிவித்திருந்தது. ஆண்டுக்கு ஆண்டு லாபம் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இந்த முறை 7 விழுக்காடு குறைந்திருக்கும் என்றும், அதே நேரம் வருவாய் 6 விழுக்காடு உயர்ந்திருக்கும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் எபிட்டா காலாண்டுக்கு காலாண்டு 8 விழுக்காடு வரை உயரும் என்று கூறப்படுகிறது. டிஜிட்டல் சேவைகள் மற்றும் ரீட்டெயில் பிரிவில் 4 விழுக்காடு வரை ஏற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டெலிகாம் துறையில் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து சராசரியாக 182 ரூபாய் வசூலிப்பதாக கூறப்படுகிறது. அந்நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 48 கோடியை எட்டியுள்ளது. ரீட்டெயில் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 27 விழுக்காடு உயரும் என்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இந்தாண்டில் இதுவரை 13 விழுக்காடு வரை உயர்ந்திருப்பதாகவும் , தேசிய பங்குச்சந்தை நிஃப்டியின் சராசரி வளர்ச்சியே 2.44 விழுக்காடு தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.