ஜியோ நிதி நிறுவனத்தின் புதிய டீல்..
ஜியோ நிதிசேவை நிறுவனம் ஏப்ரல் 15 ஆம் தேதி தனது அமெரிக்க கூட்டாளி நிறுவனமான பிளாக் ராக் நிறுவனத்துடன் வர்த்தக ஒப்பந்ததை கையெழுத்திட்டு உள்ளது. அதில் சொத்து நிர்வாகம் மற்றும் தரகு துறை பணிகளையும் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டு நிறுவனத்தில் இரு நிறுவனங்களுக்கும் 50 விழுக்காடு பங்களிப்பு இருக்கிறது. இரு நிறுவனங்களும் தலா 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய அந்நிறுவனங்கள் முன்வந்துள்ளன.அப்போதுதான் சொத்து நிர்வாகம் செய்ய முடியும் என்பதே இதற்கான அடிப்படையாகும். ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருந்து பிரிந்து வந்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் கடந்த ஜூலையில் அமெரிக்காவின் பிளாக்ராக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் சொத்து நிர்வாகம் தொடர்பான புதிய சேவைக்கு ஒழுங்குபடுத்தும் அமைப்புகளின் ஒப்புதல் கிடைக்க இருக்கிறது. இந்த கூட்டு நிறுவனம் விரைவில் பரஸ்பர நிதித்துறையிலும் கால்பதிக்க இருக்கிறது. இதற்கும் செபி ஒப்புதல் தேவை. அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் உருமாற்றம் என்பது இந்தியாவின் மீதான முக்கிய நன்மதிப்பாக பார்க்கப்படுகிறது. ஜியோ நிறுவனத்துடன் இணைந்து பயணிக்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிளாக்ராக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 4.82 விழுக்காடு குறைந்து 354.40 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.