தங்கப்பத்திரத்தில் முன்கூட்டியே பணத்தை பெறும் வசதி..
2017-18 காலகட்டத்தில் தங்கப்பத்திரத்தில் முதலீடுகள் செய்திருந்தோர், தற்போதே பணத்தை முன்கூட்டியே எடுத்துக்கொள்ளும் வசதிக்கு ரிசர்வ் வங்கி இசைவு தெரிவித்துள்ளது. ஒரு யூனிட் எஸ்சிபி எனப்படும் தங்கப்பத்திரத்துக்கு தலா 7260 ரூபாய் விலையை ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. அடுத்த 3 வேலைநாட்களின் தங்கம் முடிவு விலையின் சராசரியை வைத்து ரொக்கம் அளிக்கவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. பொதுவாக தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்து பாதியில் அதில் இருந்து வெளியேற இயலாது, குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது பணம் கட்டியிருந்தால், திட்டம் முடிவடையும் முன்பே குறிப்பிட்ட தொகை பிடித்தம் போக மீதத் தொகை 5 ஆம் ஆண்டு முடிவில் வழங்கப்படுவது வழக்கம். ஏப்ரல் 16 ஆம் தேதியிட்டு அதுவரை எவ்வளவு முதிர்வு தொகை கிடைக்குமோ அவ்வளவு பணத்தை வழங்கலாம் என்று IBJA எனப்படும் இந்திய தங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசு பாதுகாப்பு சட்டம் 2006 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்கள் முதலீடுகளை தங்கப்பத்திரத்தில் செலுத்தும் வகையில் தங்கப்பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, தனிநபர்கள், அமைப்புகள், அறக்கட்டளைகள் தங்கப்பத்திரத்தில் முதலீடுகள் செய்யப்பட்டன. ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை ஒரு நிதியாண்டில் வாங்க முடியும், அறக்கட்டளைகளாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு 20 கிலோ வரை தங்கப்பத்திரம் வழங்க அரசு வகை செய்தது. தங்கப்பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பாதுகாப்பான முதலீடு என்பதால் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.