தங்கத்தை வாங்க தயாராகும் ரிசர்வ் வங்கி..
நாள்தோறும் புதிய உச்சங்களை தொட்டு வரும் தங்கத்தினை வாங்கி சேமித்து வைக்கவும், வெளிநாட்டு பண கையிருப்பை பரவலாக்கவும் ரிசர்வ் வங்கி புதிய முன்னெடுப்பை செய்திருக்கிறது. ஏப்ரல் 5 ஆம் தேதி வரை இந்தியாவின் தங்க கையிருப்பின் மதிப்பு 648.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்தாண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி 0.43 மில்லியன் டோரி அவுன்ஸ் தங்கத்தை வாங்கியிருக்கிறது. இது மொத்த சந்தையில் 13.3 டன் எடை கொண்டதாகும். 2023 ஆம் ஆண்டு இந்தியா வாங்கிய மொத்த தங்கத்தின் எடையே 0.52 மில்லியன் டோரி அவுன்ஸ்தான். ஆனால் நடப்பாண்டில் இரண்டு மாதங்களில் மட்டும் 0.43 டோரி அவுன்ஸ் வாங்கப்பட்டுள்ளது. தங்கத்தின் கையிருப்பு நிலவரத்தை ஆராய்ந்து அதற்கு தகுந்தபடி அடுத்தகட்ட முடிவை எடுக்க இருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் பணவீக்கம் மற்றும் வெளிநாட்டு பண கையிருப்பை கட்டுக்குள் வைத்திருக்க அவ்வப்போது ரிசர்வ் வங்கி பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வது வழக்கம். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் போதுமான தங்கத்தை ரிசர்வ் வங்கி தொடர்ந்து வாங்கி வருகிறது. பிப்ரவரி 2024 நிலவரப்படி இந்தியா இதுவரை 26.26 மில்லியன் டோரி அவுன்ஸ் தங்கம் வாங்கியிருக்கிறது. கடந்த 2017-ல் இந்தியாவிடம் 17.94 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய டோரி அவுன்ஸ் தங்கம் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. உலகளவில் ஏதேனும் பிரச்சனைகள் வரும்பட்சத்தில் தங்கம்தான் நிலையான வருவாயை தருகிறது. அமெரிக்க டாலர் வலுவாக உள்ள அதேநேரம் அமெரிக்க பத்திரங்கள் நல்ல லாபத்தை ஈட்டித்தருகின்றன. அந்த நேரத்தில் தங்கம்தான் சரியான முதலீடு என்று பேங்க் ஆஃப் பரோடா நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர் மதன் சப்நாவிஸ் குறிப்பிடுகிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை தங்கத்தின் மதிப்பு 7 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. 800.79 மெட்ரிக் டன் தங்கத்தை இந்திய ரிசர்வ் வங்கி வைத்திருக்கிறது. அதில் சிறிய அளவு மட்டுமே இந்தியாவில் உள்ளது. 388.06 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் குறிப்பாக பேங்க் ஆஃப் இங்கிலாந்திலும், சர்வதேச செட்டில்மண்ட் வங்கியிலும் இந்தியா சேமித்து வைத்திருக்கிறது. 372.84 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கத்தை இந்தியா தன் வசம் இந்தியாவிலேயே வைத்திருக்கிறது.(செப்டம்பர் 2023நிலவரப்படி)