ஆஃபிஸ்க்கு வரலயா., இன்கிரிமண்ட் கம்மி போங்க..கதறும் டிசிஎஸ் ஊழியர்கள்..
கொரோனா காலகட்டத்தில் டெக் பணியாளர்கள் வீட்டில் இருந்து ஹாயாக வேலை செய்து வந்த நிலையில் கடந்தாண்டு முதல் டிசிஎஸ் தனது பணியாளர்களை ஆஃபிசுக்கு வர கெஞ்சி வந்தது. ஒரு முறைக்கு இருமுறை மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கவும்பட்டது. அதாவது அலுவலக கலாச்சாரம் மிகவும் முக்கியம் என்று டிசிஎஸ் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு அறிவுறுத்தி வந்தது. ஆனால் சிலரோ வீட்டில் இருந்தே பணியாற்றி வந்தனர். இப்படி வீட்டில் இருந்து பணியாற்றியவர்களுக்கு தற்போது சம்பள உயர்வு மிகவும் குறைவாகவும், அலுவலகத்துக்கு தொடர்ந்து சென்றவர்களுக்கு அதிகமாகவும் அளிக்கப்பட்டுள்ளதாம். டிசிஎஸ் நிறுவனத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி அலுவலகம் வந்து வேலை செய்தவர்களுக்கு 7 விழுக்காடு வரையும், அலுவலகம் வராமல் வீட்டில் இருந்து பணியாற்றியவர்களுக்கு 4 விழுக்காடு அளவுக்கும் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உதாரணமாக 5 பணியாளர்கள் டிசிஎசில் வேலை செய்தவர்களில், வீட்டில் இருந்து பணியாற்றிய 3 பேருக்கு குறைவான சம்பள உயர்வும், தொடர்ந்து அலுவலகம் சென்ற இருவருக்கு கூடுதல் சம்பளமும் அளிக்கப்பட்டுள்ளதாம். சம்பளத்தை எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்பதை நிறுவனத்தின் மேலாளர்களே இறுதி செய்ததாககூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைவான பணியாளர்களை கொண்டே நிதியாண்டை டிசிஎஸ் முடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.