ஏப்ரலில் ஆற்றல் துறையில் குவிந்த முதலீடுகள்..
ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையை அதிகம் குறிவைத்தனர். உலகளவில் பல பொருளாதார, அரசியல் பிரச்சனைகள் நிலவியபோதும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை இந்திய பங்குச்சந்தைகள் மீது அதிகம் இருந்தது. ஆற்றல், நிதித்துறை,ஆட்டோமொபைல் மற்றும் தொலை தொடர்புத்துறை பங்குகளில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆற்றல் துறையில் மட்டும் 5413 கோடி ரூபாய் அளவுக்கு பணம் முதலீடு பெறப்பட்டது. இதனால் ஆற்றல்துறையில் பெரிய லாபம் காணப்பட்டது. மக்கள் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துவது கண்கூடாக தெரிவதால் மக்கள் இதில் அதிகம் முதலீடுகள் செய்திருந்தனர். ஆற்றல் துறைக்கு அடுத்ததாக 3212 கோடி ரூபாய் நிதிச் சேவைகள் துறையில் செய்யப்பட்டது. தொலைத்தொடர்புத்துறையில் 1660 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் இருந்து முதலீட்டாளர்கள் பணத்தை வெளியில் எடுக்கத் தொடங்கினர். அதே நேரம் சந்தையில் வேகமாக விற்பனையாகும் வீட்டு உபயோகப் பொருட்கள் துறையில் 4351 கோடி ரூபாய் பங்குகளை விற்றுவிட்டனர். தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் மோசமான வருவாயை ஈட்டியதால் அவற்றில் முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் செல்லவில்லை. குறிப்பாக இன்போசிஸ், அக்சந்சர், விப்ரோ நிறுவனங்களின் வருவாய் தொடர்ந்து சரிந்து வந்ததாலும், பணியாளர்கள் குறைந்ததும் இந்த நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் 923 கோடிக்கும், கட்டுமானத்துறையின் பங்குகள் 704 கோடி ரூபாய்க்கும் முதலீட்டாளர்கள் விற்பனை செய்துள்ளனர். வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்கும் பொருட்கள் துறை பங்குகள் 1624 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.