சீனாவை அலறவிட்ட மஸ்க்..
பிரபல மின்சார கார் நிறுவனமான டெஸ்லா சீனாவில் தனது கார்களின் விலையை கணிசமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் முதலாளியான மஸ்க் அண்மையில் இந்தியாவுக்கு வர இருந்த நிலையில் அதனை கடைசி நேரத்தில் மஸ்க் மறுத்துவிட்டார். இந்த சூழலில் சீனாவில் டெஸ்லாவின் மாடல் ஒய், மாடல் எஸ் மற்றும் எக்ஸ் ஆகிய கார்களின் விலையை டெஸ்லா குறித்துள்ளது. இந்த விலை குறைப்பு அமெரிக்காவிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாடல் 3 ரக கார்கள் சீனாவில் 231900 யுவானுக்கு விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாடல் ஒய் கார்கள் 249900 யுவானாக சரிந்துள்ளது. வழக்கமான மாடல் எஸ் ரக கார்கள் 684900 யுவானாகவும், எஸ் பிலாய்டு ரக கார்கள் 814,900 யுவானுக்கும் விற்பனையாகிறது. டெஸ்லா நிறுவனத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து உள்ளூர் நிறுவனமான லி ஆட்டோ நிறுவனமும் 6-7 விழுக்காடு விலை குறைப்பில் ஈடுபட்டது. சீனாவில் டெஸ்லா நிறுவன கார்களுக்கு மவுசு குறைந்து வருவதால் மாடல் 3 மற்றும் ஒய் ஆகிய கார்களை குறைந்த விலைக்கு விற்க மஸ்க் முடிவெடுத்துள்ளார். டெஸ்லாவுக்கு பிரதான சீன போட்டியாளரான பிஒய்டி நிறுவனமும் மிகக்குறைந்த விலைக்கு அதன் ஹைப்ரிட் கார்களை விற்று வருகிறது. சிக்கன நடவடிக்கையாக டெஸ்லா நிறுவனம் சில பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியும் வருகிறது. அமெரிக்க நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் இந்தியாவில் அண்மையில் மின்சார வாகன கொள்கை மாற்றி அமைக்கப்பட்டது. அது தற்போது சீன நிறுவனங்களுக்கு சாதகமாகி வருகிறது. பல சீன நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள பிரபல தொழிலதிபர்களுடன் இணைந்து கூட்டு நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர்.