சீனாவின் மாற்று ஏற்பாடு..
அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சவால் விடும் வகையில் சீனாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தி ஒரு பக்கம் அதகரித்து வரும் நிலையில் சீனா தனது புதிய மாற்று திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய பயன்படுத்தாத வாஷிங் மிஷின், ஃபிரிட்ஜ் மற்றும் அதிக மாசுகளை ஏற்படுத்தும் பழைய கார்களை கொடுத்துவிட்டு புதிய பொருட்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தும் பழைய கார்களுக்கு பதிலாக புதிய மின்சார கார்களை வாங்கினால் குறிப்பிட்ட தொகையை உள்ளூர் நிர்வாகமே ஊக்கத் தொகையாக அளிக்கிறது. இருக்கும் பொருட்களை புதிதாக மாற்றிக்கொள்ளும்படி அறிவுறத்தியுள்ள அரசு தண்ணீரை குறைவாக பயன்படுத்தும் வாஷிங் மிஷினை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. இதற்காக பெரிய பட்ஜெட்டையே சீனா ஒதுக்கியுள்ளது. சீனாவிற்குள்ளேயே பொருட்களை வாங்குவதால் பொருளாதாரம் அரை விழுக்காடு வரை உயரும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய பேட்டரி வாகனங்களை வாங்கினால் சீனாவில் உள்ளூர் வணிகம் கணிசமாக உயரும் என்றும் இதற்காக சீனா முழுவதும் 2 ஆயிரம் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீடு வீடாக சென்று பழைய பொருட்கள், கார்கள் இருந்தால் அதனை மறு சுழற்சி செய்யவேண்டும் என்று அறிவுறுத்துவார்கள் ஒரு குழுவினர் என்றும் கூறப்பட்டுள்ளது. சீனாவில் மட்டும் கடந்தாண்டு 336 மில்லியன் கார்களும், 30 லட்சம் பிரிட்ஜ்களும், வாஷிங் மிஷின் மற்றும் ஏசிகளும் புழக்கத்தில் இருக்கும் நிலையில் அவற்றில் சிறிய அளவு மாற்றம் ஏற்படுத்துவதே பெரிய சவால் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.