ஆட்குறைப்பு முக்கியமாம் சொல்கிறார் மஸ்க்..
உலகின் முக்கியமான மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்லா நிறுவனத்தின் லாபம் பெரிய அளவில் சரிந்திருப்பது உறுதியாகியுள்ளது. மின்சார கார் சந்தையில் நிலவும் போட்டி மற்றும் டெஸ்லாவில் ஆட்குறைப்பும் நடந்துள்ளது குறித்தும் அந்நிறுவனம் தனது கருத்தை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் டெஸ்லா நிறுவன விற்பனை கடந்தாண்டு இதே காலகட்டத்தை விட 55 விழுக்காடு குறைந்து 1.13 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மட்டுமே இருந்தது. இதனிடையே பணியாளர்களை பணிநீக்கம் செய்தது குறித்து அந்நிறுவன தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் பேசியிருக்கிறார். அதில் டெஸ்லா நிறுவனத்தில் பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்பட்டது முக்கியமான முடிவு என்றும், நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அது அவசியம் தேவை என்றும் மஸ்க் கூறியுள்ளார். டெஸ்லா நிறுவனத்தில் இருந்து 14 ஆயிரம் பணியாளர்களை வேலையில் இருந்து தூக்கிவிட்டனர். இவ்வாறு 10 விழுக்காடுக்கும் அதிகமான பணியாளர்களை வேலையை விட்டு தூக்கியதால் டெஸ்லா நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மிச்சமாகவதாகவும் விளக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு பாதியில் புதுப்புது மாடல் கார்களை டெஸ்லா நிறுவனம் உற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 21.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை டெஸ்லா நிறுவனம் ஈட்டியிருந்தது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தை விட 9 விழுக்காடு குறைவாகும். இந்தாண்டு 40 விழுக்காட்டுக்கும் அதிகமாக சரிந்த டெஸ்லா நிறுவன பங்குகள் அண்மையில் 11 விழுக்காடு விலை உயர்ந்தது.