ஆட்குறைப்பில் ஆர்வம் காட்டும் ஓலா கேப்ஸ்..
பிரபல கால்டாக்சி நிறுவனமான ஓலா நிறுவனம் தனது சேவையில் உள்ள ஓட்டுநர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினரை ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹேமந்த் பக்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 10 விழுக்காடு பேரை பணியில் இருந்து நீக்க இருப்பதாக கூறியுள்ளார்.
பதவி ஏற்ற 3 மாதங்களில் அவரும் தனது ராஜினாமா கடிதத்தை அளித்திருக்கிறார். ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் தினசரி அலுவல்களை விரைவில் வேறொரு நபர் கவனிக்க இருக்கிறார்.ஆரம்ப பங்கு வெளியீடு எனப்படும் ஐபிஓவுக்கான அனைத்து பணிகளையும் ஓலா நிறுவனம் தொடங்கியிருக்கும் சூழலில் ஓலா கேப்ஸ் நிறுவனம் ஆட்குறைப்பில் இறங்கியிருக்கிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 7250 கோடி ரூபாய்க்கான ஐபிஓவின் பணிகளை தொடங்கியிருக்கும் அதே நேரம் ஓலா கேப்ஸ் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடைபெற இருக்கிறது. 2010-ல் ஓலா கேப்ஸ் நிறுவனம் தொடங்கியதும் சாஃப்ட் பேங் மற்றும் டைகர் குளோபல் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதரவை தெரிவித்தன. ஓலா கேப்ஸ் நிறுவனம் அண்மையில் தனது சர்வதேச சேவையை நிறுத்திய நிலையில் அந்நிறுவனம் இந்தியாவின் பக்கம் கவனம் செலுத்தியது. ஓலா மொபிலிட்டி நிறுவனம் கடந்த 23 நிதியாண்டில் 2,135 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருக்கிறது. இது கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியாகும். அதாவது 58 விழுக்காடு வளர்ச்சி, 2022-ல் இதே நிறுவனம் 66 கோடி ரூபாய் நஷ்டம் காட்டியது. ஓலா நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஏஎன்ஐ டெக்னாலஜீஸ் நிறுவனம் 42 விழுக்காடு வருவாய் உயர்ந்து 2799 கோடி ரூபாய் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.