அதானியின் 6 நிறுவனங்களுக்கு செபி நோட்டீஸ்..
விதிகளை பின்பற்றாமல் பணப்பரிவர்த்தனை செய்ததால் அதானி குழுத்தின் 6 நிறுவனங்களுக்கு ஷோ காஸ் நோட்டீஸை செபி அளித்துள்ளது. பட்டய கணக்கரின் சான்று இல்லாமல் நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில் செபி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டு குறித்து விளக்கம் கேட்டு அதானி என்டர்பிரைசர்ஸுக்கு 2 ஷோ காஸ் நோட்டீஸ் கிடைத்திருப்பதை அதானி குழுமம் உறுதி செய்திருக்கிறது. Adani Ports & Special Economic Zone, Adani Power, Adani Energy Solutions, Adani Wilmar, Adani Total Gas ஆகிய ஐந்து நிறுவனங்களும் இதே பாணியில் நோட்டீஸ் பெற்றுள்ளன. செபியின் இந்த நோட்டீஸ் காரணமாக அதானி குழுமத்தில் உள்ள சில நிறுவனங்களுக்கு நிதி சார்ந்த பாதிப்பு ஏற்படுமோ என்று ஆடிட்டர்கள் ஆலோசித்து வருகின்றனர். அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டை அடுத்து சில ஆவணங்களை தற்போது செபி கேட்டு வருகிறது. சில ஆவணங்கள் விடுபட்டிருந்தால் அதற்கு சட்ட ரீதியிலான விளக்கங்களும், அதற்கு உண்டான அபராதத் தொகையும் செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முறைகேடாக பங்குச்சந்தைகளில் மதிப்பு உயர்த்தப்பட்டதாக கூறப்படும் வழக்கில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்துக்கு செபி தனது அறிக்கையை அளித்துள்ளது. 13 பரிவர்த்தனைகள் சட்டவிரோதமாக நடந்திருப்பதாகவும், அது குறித்து விசாரித்து வருவதாகவும் உச்சநீதிமன்றத்தில் செபி கூறியிருந்தது. கடந்த 2023 ஜனவரியில் ஹிண்டன்பர்க் நிறுவவனம், அதானி குழுமத்தின் மீது சரமாரி புகார்களை தெரிவித்திருந்தது. அதில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும்,அதன் வெளிப்படைத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.