செயற்கை நுண்ணறிவை சாடிய வாரன்..
செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை அபாயகரமாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக வாரன் பஃபெட் எச்சரித்துள்ளார். மோசடி செய்து பணம் பறிக்கும் திட்டத்துக்கு செயற்கை நுண்ணறிவு பயன்பெறலாம் என்றும் அது ஒரு பெரிய தொழிலாகவே மாறலாம் என்றும் வாரன் குற்றம்சாட்டினார். உண்மைக்கு புறம்பான உள்ளடக்கங்களை தயாரித்து மோசமான வகையில் சித்தரித்து பணத்தை சம்பாதிக்க இந்த நுட்பம் உதவும் என்றும் காட்டமாக விமர்சித்தார். ஏஐ வாய்ஸ் குளோனிங் மற்றும் டீப் ஃபேக் நுட்பங்களின் தீமைகளையும் அவர் விளக்கினார். செயற்கை நுண்ணறிவு நுட்பத்தால் ஏராளமான நண்மைகளும் இருப்பதாக குறிப்பிட்ட வாரன், ஆனால் நல்ல விஷயங்கள் எந்தளவுக்கு செல்லும் என்பது கேள்விக்குறிதான் என்கிறார் வாரன். செயற்கை நுண்ணறிவு நுட்பம் கடந்தாண்டு முதல் பேசப்பட்டு வருகிறது. இந்த நுட்பத்தை பயன்படுத்தும் என்விடியா,மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பங்கு மதிப்பை விண்ணை முட்டும் அளவுக்கு வைத்துள்ளனர். குறிப்பாக 507 விழுக்காடு அளவுக்கு என்விடியாகவும், மெட்டா நிறுவன பங்குகள் 275 விழுக்காடு அளவுக்கும் கடந்த 2022 முடிவுக்கு பிறகு உயர்ந்திருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு பற்றி தனக்கு அந்தளவுக்கு தெரியாது என்று குறிப்பிட்ட அந்த 93 வயது இளைஞர், 20 ஆம் நூற்றாண்டில் அணு குண்டு எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதற்கு நிகரான தாக்கத்தை செயற்கை நுண்ணறிவு நுட்பம் ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.