நிதியமைச்சர் மறுப்பு..
இந்தியாவில் தற்போது தேர்தல் காலம் என்பதால், புதிய முழு பட்ஜெட் இல்லாமல் பழைய இடைக்கால பட்ஜெட்டே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பினர். அதில் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு வருமான வரி செலுத்தும் முறையில் மாற்றம் ஏற்படுமா என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்த பெரிய மாற்றமும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செய்ய மாட்டோம் என்று தெளிவுபடுத்தினார். புதிய வருமான வரி குறித்த வதந்தி பரவிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் 30 நிறுவன பங்குகளில் ஆயிரம் புள்ளிகள் வரை வீழ்ச்சி காணப்பட்டது. தனியார் தொலைக்காட்சியில் வெளியான அந்த தகவலில் வருமான வரி செலுத்தும் முறையில் பெரிய மாற்றத்தை செய்திருப்பதாக கூறப்பட்டது. அனைத்து தரப்பினருக்கும் சீரான ஒரு வருமான வரித் திட்டம் கொண்டுவரப்பட இருப்பதாக அந்த தொலைக்காட்சி அறிக்கை குறிப்பிட்டது. இதனை மத்திய நிதியமைச்சர் தெளிவுபடுத்தும் வகையில் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்திலும் பதிவு செய்திருக்கிறார். அதில் இது போன்ற தகவல்கள் எங்கிருந்து வருகின்றன என்று தமக்கு தெரியவில்லை என்றும், நிதியமைச்சகத்திடம் இரு முறை சரிபார்க்காமல் எப்படி இந்த தகவல் பரப்பப் படுகிறது என்றும் கேள்வி எழுப்பிய நிதியமைச்சர். இது முழுக்க முழுக்க கற்பனைதான் என்றார். பல்வேறு தரப்பில் பணம் வைத்திருக்கும் பலருக்கு வெவ்வேறு வரி செலுத்தும் முறை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.