2025-ல் 4 ஆம் இடத்துக்கு முன்னேறுமா இந்தியா?
மத்திய அரசின் நிதி ஆயோக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த அமிதாப் காந்த்,இந்தியாவின் வளர்ச்சி குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார். பல்வேறு சர்வதேச காரணிகளால் இந்தியாவுக்கு உகந்த சூழல் இருப்பதாகவும் பொருளாதாரத்தில் 2025 ஆம் ஆண்டில் ஜப்பானை இந்தியா மிஞ்சிவிடும் என்றும் அமிதாப் காந்த் நம்பிக்கை தெரிவித்தார். அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் மிகப்பெரிய 4 பொருளாதார நாடுகளாக உள்ளன. இந்தியா தற்போது 5 ஆவது இடத்தில் இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு 11 ஆவது இடத்தில் இருந்த இந்தியாவின் வருவாய் தற்போது அதிகரித்து இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 3.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது. 2013-ல் மோசமாக இருந்த இந்திய பொருளாதாரம், ஜிஎஸ்டி வரி வசூல்அதிகரிப்பு உள்நாட்டு உற்பத்தியில் கடந்த 3 காலாண்டுகளாக 8 விழுக்காடுக்கும் மேல் வளர்ச்சி , ஓரளவு கட்டுப்பட்டுள்ள விலைவாசி உள்ளிட்ட காரணிகளை அவர் பட்டியலிட்டுள்ளார். பிரேசில், இந்தோனேசியா, தென்ஆப்ரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளின் பொருளாதாரத்தை கடந்த 2013-ல் மோசமாக மார்கன் ஸ்டான்லி நிறுவனம் மதிப்பிட்டு இருந்தது. சிறப்பான பொதுத்துறை உள்கட்டமைப்பு, மின்சார பணப்பரிவர்த்தனைகள் மற்றும் ஜன்தன் கணக்குகள் உள்ளிட்டவற்றால் இந்தியா பெரிதாக வளர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். அரசியல் நிலைத்தன்மை , போதுமான நிதி கொள்கை உள்ளிட்ட அம்சங்கள் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தி வைத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு படி உலகிலேயே வேகமாக வளரும் நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. அந்த அமைப்பின் கணிப்புப்படி 2024-ல் இந்தியாவின் வளர்ச்சி 6.5 விழுக்காட்டிற்கு பதிலாக 6.8 விழுக்காடாக இருக்கும் என்றும் ஐஎம்எஃப் கணித்திருக்கிறது. 2022-2023ல் இந்திய பொருளாதாரம் 7.7%ஆகவும்,2021-2022-ல் 8.7 விழுக்காடாகவும் இருந்ததாகவும் புள்ளிவிவரத்தை அவர் அடுக்கியுள்ளார்.