ஹல்திராம்ஸை வாங்கத் துடிக்கும் நிறுவனங்கள்..
நல்ல ஸ்னாக்ஸ் சாப்பிடனும் காசு பிரச்சனை இல்லை என்று இருக்கும் நபர்களின் முதல் தேர்வாக இருப்பது ஹால்திராம்ஸ் என்ற ஸ்னாக்ஸ் நிறுவனம்தான். இந்த நிறுவனத்தை அகர்வால் குடும்பத்தினர் டெல்லி மற்றும் நாக்பூரில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தை வாங்க அபுதாபி முதலீட்டு நிறுவனமும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஜிஐசி நிறுவனமும், பிளாக்ஸ்டோன் நிறுவனமும் இணைந்து வாங்க முயற்சி செய்து வருகின்றன. பிளாக்ஸ்டோனும் அதன் தோழமை நிறுவனங்களும் இணைந்து ஹல்திராம்ஸ் நிறுவனத்தில் 74-76 விழுக்காடு பங்குகளை வாங்க முற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எவ்வளவு ரூபாய்க்கு தெரியுமா, 70 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு. இந்த டீல் முடிந்தால் இந்தியாவில் இதுதான் பெரிய தனியார் ஈக்விட்டி வணிகமாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்..இந்நிலையில் ஹல்திராம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள கே.கே. சுடானி, தங்கள் நிறுவன பங்குகளை விற்கத் தயாராக இல்லை என்றார்.
அதே நிறுவனம் ஹல்திராம் ஃபுட் இண்டர்நேஷனல் என்ற ஒரு பிரிவாகவும். ஹல்திராம் ஸ்னாக்ஸ் பிரைவேட் லிமிடட் என்ற மற்றொரு பிரிவாகவும் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனம் மட்டும் 500 வகையான உணவு திண்பண்டங்களையும், இனிப்பு வகைகளையும ்தயாரித்து 100 நாடுகளுக்கு மேல் விற்று வருகின்றனர். கடந்த 2016 முதல் மிகப்பெரிய நிறுவனங்களும் அகர்வால் குடும்பத்திடம் பங்குகளை விற்கும்படி கொக்கிபோட்டு வருகின்றனர் ஆனால் அகர்வால் குழுமம் விட்டுக்கொடுக்கவில்லை. 2018-ல் கெலாக்ஸ் நிறுவனத்துடன் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டது ஆனால் அவர்கள் பாதியிலேயே ஓட்டம்பிடித்துவிட்டனர். 1937-ல் கங்கா பிஷன் அகர்வால் என்பவரால் நிறுவனம் தொடங்கப்பட்டது. பின்னர் மிகப்பெரிய அளவில் இந்த திண்பண்டங்கள் பட்டைய கிளப்பியுள்ளன. 2025 காலகட்டத்தில் திண்பண்டங்கள் சந்தை 1.19 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், கொரோனாவுக்கு பிறகு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட திண்பண்டங்கள் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.