குட்டி விமானங்களை வாங்கும் இண்டிகோ..
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக இண்டிகோ நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனம் ஏடிஆர், ஏர்பஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அந்த பேச்சுவார்த்தையில் 100 குட்டி விமானங்கள் வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பிராந்திய நெட்வொர்க்கை வலுப்படுத்தும் வகையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இண்டிகோ நிறுவனத்தில் ஏற்கனவே 45 மற்றும் 78 பேர் அமர்ந்து செல்லும் குட்டி விமானங்களை வைத்துள்ளது. ஏடிஆர் நிறுவனம் இந்த விமானங்களை வடிவமைத்துள்ளது. இந்நிலையில் ஏர்பஸ் ஏ220, எம்பிரார் ஈ-175 உள்ளிட்ட விமானங்களையும் வாங்க இண்டிகோ துடித்து வருகிறது. 30 ஏர்பஸ் ஏ 350-900 ரக விமானங்களையும் அந்நிறுவனம் வாங்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் 060 விழுக்காடு அளவுக்கு உள்நாட்டு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம்தான் கையாள்கிறது. உடான் திட்டத்தின் மூலம் சிறிய நகரங்களை இணைக்கும் முயற்சியிலும் இண்டிகோ தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு 60 இடங்களில் புதிய விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் தொடங்கியுள்ளது. பிற விமான நிறுவனங்கள் இயக்கத் தயங்கும் இடங்களில் விமான சேவைகளை இயக்கி அவற்றை வாய்ப்புகளாக இண்டிகோ பார்த்து வருகிறது. தேர்தல் முடிந்தபிறகு, பிராந்திய இணைப்பு தொழில் மிகவும் வளர்ச்சியடையும் என்றும் 148 விமான நிலையங்களை 200 ஆக அடுத்த 4 ஆண்டுகளில் உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.