மருத்துவத்துறையில் கால்பதிக்கிறாரா முகேஷ் அம்பானி?
இந்தியாவின் தொழிலதிபர்களில் மிகமுக்கியமானவரான முகேஷ் அம்பானி சுமார் 12லட்சத்து 52 ஆயிரத்து 740 கோடி ரூபாய் மதிப்புள்ள நோய் கண்டறிதல் துறையில் கால்பதிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். இந்தியாவிலேயே பெரிய சந்தை மூலதனம் உள்ள நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இருக்கிறது. இவரின் குழந்தைகளான ஆகாஷ், ஆனந்த் மற்றும் இஷா ஆகியோர் ரிலையன்ஸ் குழுமத்தின் வெவ்வேறு நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் இருந்து வருகின்றனர். 67 வயதாகும் முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பு 9 லட்சத்து 20 ஆயிரத்து 340 கோடி ரூபாயாக உள்ளது. சுகாதார துறையில் நோய் கண்டறிதல் மிக முக்கியம் என்பதால் அதில் முதலீடு செய்ய முகேஷ் அம்பானி திட்டமிட்டு இருக்கிறார். ரிலையன்ஸ் ரீட்டெயில் வென்சர்ஸ் நிறுவனம் , நோய் கண்டறிதல் சேவை நிறுவனங்களை கண்டுபிடித்து ஆயிரம் முதல் 3 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான நிறுவனங்களில் பெரும்பாலான பங்குகளை வாங்க திட்டமிட்டு இருக்கிறது. இந்தியா முழுவதும் இருக்கும் வகையில் இந்த திட்டத்தை முகேஷ் அம்பானி கையில் எடுத்துள்ளார். ஏற்கனவே ரிலையன்ஸ் ரீட்டெயில் வசம் மருந்தக நிறுவனமான நெட்மெட்ஸ் இருக்கிறது. கடந்த 2020-ல் 620 கோடி ரூபாய் கொடுத்து அந்நிறுவனத்தின் பெரும்பாலான சொத்துகளை ரிலையன்ஸ் வாங்கியது. தைரோகேர், ஹெல்த்தியன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஏற்கனவே நெட்மெட்ஸ் சேவைகளை அளித்து வந்தாலும். நேரடி ஆய்வகங்களை அமைக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 2023-ல் முதல் ஆஃப்லைன்ஸ் ஸ்டோரை தொடங்கிய நெட்மெட்ஸ், தற்போது இந்தியா முழுவதும் ஆயிரம் கிளைகளை தொடங்கியுள்ளது.