வெளிப்படைத்தன்மை இல்லை …ரகுராம் ராஜன் காட்டம்..
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக இருந்தவர் ரகுராம் ராஜன். இவர் ஒரு நிகழ்ச்சியில் அண்மையில் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். அதில் இந்தியாவில் உற்பத்தி செய்வதை தாம் எதிர்க்கவில்லை என்றும், மானியங்கள் மற்றும் சந்தாக்களின் பயன்பாட்டில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மத்திய அரசு பெரிய நிறுவனங்களுக்கு அதிக மானியத்தை உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையாகவும், பிற ஊக்கத் தொகையாகவும் அளிப்பதாகவும் சாடினார். குறிப்பாக சிப் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இத்தனை சலுகைகள் அளிப்பதா என்றும் ரகுராம் ராஜன் கேள்வி எழுப்பியுள்ளது. இத்தனை பெரிய மானியங்கள் அளிக்கப்பட்டாலும் போதுமான வேலைவாய்ப்புகள் அளிக்கப்படவில்லை என்றும் சாடியுள்ளார். உற்பத்தித்துறையில் அரசின் திட்டங்கள் குறைந்திருப்பது பற்றி அவர் பேசுகையில் இதனை தெரிவிக்கிறார். 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு கார்மன்ட்ஸ் துறையில் ஏற்றுமதி 20 விழுக்காடு வரை குறைந்திருக்கிறது. இந்த துறையில்தான் அதிக பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. அதே நேரம் வங்கதேசம், வியட்நாமில் கார்மென்ட்ஸ் துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதையும் ரகுராம் ராஜன் சுட்டிக்காட்டியுள்ளார். 28 நானோமீட்டர் சிப் தயாரிப்பு எப்படி தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும் என்றும் ரகுராம் ராஜன் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். மானியங்களை பள்ளிகள், கல்லூரிகளுக்கு அதிகம் செலவு செய்யலாம் என்றும் கூறியுள்ளார். தேர்தல் பத்திரங்களை உச்சநீதிமன்றம் செல்லாது என்று அறிவித்துவிட்ட பிறகு வெளிப்படைத்தன்மையில் அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அண்மையில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் உற்பத்தி துறை இந்தியாவில் வளர்ந்து வருவதாக கூறியிருந்த நிலையில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரின் இந்த கருத்து புதிய புயலை கிளப்பியுள்ளது.