75% முதலீட்டாளர்கள் நிறுவனங்களை நடத்துவதில்லை..
பைஜுஸ் நிறுவனத்தில் இருந்து அண்மையில் மோகன்தாஸ் பாய் மற்றும் ராஜ்நிஷ் குமார் ஆகியோர் விலகுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் பைஜுஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்திரன் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் எந்த வித அமைதி ஒப்பந்தமும் ஏற்படவில்லை. ஜெனரல் அட்லாண்டிக், பீக் எக்ஸ்வி ஆகிய நிறுவனங்கள் பைஜூஸ் மீது சரமாரி புகார்களை முன்வைத்துள்ளனர். அதில் பைஜுஸ் நிறுவனம் , முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்துவதாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வரும் 6 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் மூத்த முதலீட்டு ஆலோசகரான மோகன்தாஸ் பாய், ரவீந்திரனுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்த முற்பட்டார். இது தொடர்பாக அவர் தனியார் பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார், அதில், பைஜூஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுக்களை மாற்றி அமைக்க கோரியுள்ளார். சரியான நிர்வாகம் இல்லாததால் பைஜூஸ் நிறுவனம் செயலிழந்துவிட்டதாக கூறினார். அமெரிக்கா மற்றும் மற்ற பக்குவம் வாய்ந்த நாடுகளில் நிதி மேலாண்மை செய்யும் 75 %பேர் நிறுவனங்களின் இயக்குநர்களுடன் அமர்ந்து பேசி செயல் அனுபவத்தை பகிர்வாார்கள், இந்தியாவில் 75% பேர் நிறுவனங்களை நடத்தாமல் வெறும் முதலீடுகளை மட்டுமே செய்கின்றனர். மிகவும் அனுபவம் குறைந்த இளம் தலைமுறையினர் இப்படி முதலீடு செய்வதுதான் பிரச்சனையாக இருக்கிறது என மோகன்தாஸ்பாய் கூறியுள்ளார். பைஜூஸ் விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்ட போது உள்ளே புகுந்து இயக்குநர்கள் குழு நிறுவனத்தை நடத்தியிருக்க வேண்டும் என்றும் மோகன்தாஸ்பாய் குறிப்பிட்டுள்ளார்.