விழுந்து நொறுங்கிய அமெரிக்க சந்தைகள்..
அமெரிக்க பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை மோசமாக நிறைவடைந்தன. அந்நாட்டு பங்குச்சந்தையான டவ் ஜோன்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து விழுந்து இந்தாண்டின் மோசமான சரிவாக பதிவாகியுள்ளது. அமெரிக்க பங்குச்சந்தைகளில் போயிங் நிறுவன பங்குகள் ஏழரை விழுக்காடு வரை சரிந்தன. S&P பங்குச்சந்தைகளும் 0.7 விழுக்காடு சரிந்தன. இதேபோல் நாஸ்டாக் பங்குச்சந்தையிலும் பெரிய வீழ்ச்சியாக 0.4 விழுக்காடு வீழ்ச்சி காணப்பட்டது. நாஸ்டாக் வீழ்ச்சியில் மிகமுக்கியமாக NVIDIA நிறுவன பங்குகள் 9 விழுக்காடு வரை வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது. S &P பங்குச்சந்தையில் 400க்கும் மேற்பட்ட பங்குகள் வீழ்ச்சியை கண்டன. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் மட்டுமே லாபத்தை பதிவு செய்தன. சேவைகள் மற்றும் உற்பத்தி துறை எண்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. செப்டம்பர் மாதத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைப்பதற்கான சாத்தியம் 51 விழுக்காடாக குறைந்ததால் பங்குச்சந்தைகளில் சரிவு காணப்பட்டுள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதே நேரம் பிட்காயினின் மதிப்பு 4 விழுக்காடு வரை சரிந்திருக்கிறது. எண்ணெய் மற்றும் தங்கம் விலையும் பெரியளவில் சரிவை சந்தித்தன