“நிறுவனத்தை விற்க நிர்பந்திக்கப்பட்டேன்”
ஒரு காலத்தில் தமிழ்சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் தொடங்கி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்ப நாட்கள் வரை மிகப்பெரிய பிராண்டாக இருந்தது ஏர்செல். இந்த நிறுவனத்தின் நிறுவனரான சின்னக்கண்ணன் சிவசங்கரன் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா இருந்ததைவிட இப்போது வேறு மாதிரியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வியாபாரத்தை வளர்க்க கடுமையான அழுத்தம் தரப்படுவதாகவும், இதனால் கடுமையான இழப்பு நேரிட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். ராஜ் ஷமானி என்பவருடன் நடத்தப்பட்ட நேர்காணலில் சிவசங்கரன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அரசியல்வாதிகள் தலையீட்டால் தனது நிறுவனத்தை இழந்து நிற்பதாகவும் அவர் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு நிதி இல்லாததால் ஏர்செல் நிறுவனம் மூடப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டில் மலேசியாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான ஆனந்த கிருஷ்ணன் என்பவரிடம் இருந்து 74 விழுக்காடு பங்குககளை வாங்கிய பிறகு அந்த நிறுவனத்தை ஏர்செல் கைப்பற்றியது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தம் குறித்து வழக்கு நடந்த உடன், தனது பங்குகளை மீண்டும் மேக்சிஸ் நிறுவனத்திடமே விற்க நிர்பந்தம் வந்ததாக கூறினார். அந்த காலகட்டத்தில் வெறும் 3,400 கோடி ரூபாய்க்கு தனது நிறுவனத்தை விற்க சிலர் நிர்பந்தித்ததாகவும், at&T நிறுவனத்துக்கு விற்றிருந்தால் 8 பில்லியன் அளவுக்கு பணம் கிடைத்திருக்கும் என்றும் சிவசங்கரன் தெரிவித்தார். 1985-ல் பிரபல டென்னிஸ் வீரர் விஜய் அமிர்த்த ராஜின் தந்தை ராபர்ட் அமிர்த்ராஜிடம் இருந்து ஸ்டெர்லிங் கணினி நிறுவனத்தை சிவசங்கரன் வாங்கி விற்கத் தொடங்கினார். அன்று தொடங்கிய பயணம், 1997-ல் பார்தி டெலிகாம் நிறுவனத்தில் 10 விழுக்காடு பங்குகளை வாங்கும் அளவுக்கு பணத்தை குவித்தது. என்ரான் இந்தியா என்ற நிறுவனத்தை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கும் வாய்ப்பு கூட தமக்கு கிடைத்ததாக சிவசங்கரன் தெரிவித்தார்.