2.1 லட்சம் கோடி ரூபாய் டிவிடண்ட் ..லாபம் எப்படி?
அண்மையில் மத்திய அரசுக்கு டிவிடண்ட்டாக ரிசர்வ் வங்கி 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அளித்தது. இது எப்படி சாத்தியம் என்று பல தரப்பினருக்கும் சந்தேகம் எழுந்தது. அதனை சற்று விரிவாக பார்க்கலாம் வாருங்கள்..
வங்கிகளுக்கு எல்லாம் தலைமை வங்கியாக செயல்படும் ரிசர்வ் வங்கி பணத்தை அச்சிடுவதால் கணிசமான தொகையை வருவாயாக பெறுகிறது. எளிமையாக சொல்ல வேண்டுமெனில், ஒரு 500 ரூபாய் நோட்டை அச்சிடுவதற்கு வெறும் 2 ரூபாய் மட்டுமே ரிசர்வ் வங்கிக்கு செலவாகிறது. அதே நேரம் மீதம் 498 ரூபாய் ரிசர்வ் வங்கிக்கு லாபமாகும். இப்படித்தான் மத்திய ரிசர்வ் வங்கிக்கு வருவாய் பல மடங்கு கிடைக்கிறது. அவ்வப்போது இருக்கும் பணத்தை மத்திய அரசுக்கு டிவிடண்ட்டாக ரிசர்வ் வங்கி அளித்தால் அது பொருளாதார நடவடிக்கைகளுக்கு உதவிகரமாக இருக்கிறது. வரவுக்கும் செலவுக்குமான இடைவெளியை குறைக்கவும் அரசுக்கு உதவி செய்கிறது. அரசுக்கு ரிசர்வ் வங்கி பணம் தந்துள்ளதால் நிதி பற்றாக்குறை 0.4 விழுக்காடு வரை சரிகிறது. கொஞ்சம் பணத்தை மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்றுள்ளதால் ,மத்திய அரசு வேறு நபர்களிடமோ,வேறு அமைப்புகள்,வேறு நாடுகளிடமோ கையேந்த வேண்டி இருக்காது. 2022-23 காலகட்டத்தில் மத்திய அரசுக்கு டிவிடண்ட்டாக ரிசர்வ் வங்கி வெறும் 87,416 கோடி ரூபாய் மட்டுமே அளித்தது. இந்நிலையில் இது தற்போது இரு மடங்காக உயர்த்தி அளித்திருக்கிறது. வெறும் 1.5 டிரில்லியன் ரூபாய் மட்டுமே ரிசர்வ் வங்கியிடம் இருந்து டிவிடண்ட்டாக பெற முடியும் என்று இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்த சூழலில் ரிசர்வ் வங்கி சாமர்த்தியமாக செயல்பட்டு 2.11 லட்சம் கோடி ரூபாயை அரசுக்கு அளித்து நாட்டுக்கு வளர்ச்சியை அளிக்கிறது என்கிறார்கள் நிபுனர்கள்