அரசியலுக்கு நோ சொன்னார் ரகுராம்ராஜனின் மனைவி
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் தாம் அரசியலில் நுழைய தனது குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறினார். அரசியலில் இறங்குவதற்கு பதிலாக வழிகாட்டலாம் என்றும் அவருக்கு அவரின் குடும்பத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். அரசாங்கத்தின் திட்டங்கள் தடம் மாறும் போது தாம் அவற்றை விமர்சிக்கத் தயங்குவதில்லை என்றும் ரகுராம்ராஜன் தெளிவுபடுத்தியுள்ளார். காங்கிரஸில் இணைய இருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார் ரகுராம் ராஜன். மேலும் ராகுல்காந்தி குறித்தும் ராஜனிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரகுராம் ராஜன், காங்கிரஸில் உள்ள ராகுல்காந்தி, ஸ்மார்ட்டானவர் என்றும், புத்தி கூர்மை உள்ளவர் என்றும் தைரியமானவர் என்றும் தெரிவித்தார். தனது பாட்டி சுட்டிக் கொல்லப்பட்டபோதும், தனது தந்தை குண்டு வெடித்து இறந்த பிறகும் ராகுல்காந்தி குடும்பம் அதை கண்டிருப்பதாகவும் நெகிழ்ச்சியாக கூறினார். மோடி அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்தை கடுமையாக விமர்சித்தவர் ரகுராம் ராஜன். ராகுல்காந்திக்கு தீர்க்கமாக சில விஷயங்கள் தெரிந்துள்ளது. எனவே அவருடன் விவாதம் நடத்த வேண்டும் என்றும் ரகுராம் ராஜன்தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ரகுராம் ராஜனை அரசியல் மேகம் சூழ்ந்து வருகிறது. அப்போது ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயனத்தை மேற்கொண்டபோது ரகுராம் ராஜன் அதனை வரவேற்று , ராகுல்காந்தியை சந்தித்து பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை பாஜகவினர் அப்போது முதல் விமர்சித்து வருகின்றனர்.