சத்தமில்லாமல் 20,000 பேர் பணிநீக்கம்..
இந்திய ஐடி துறையில்சத்தமில்லாமல் 20 ஆயிரம் பணியாளர்கள் வேலையிழந்துள்ளனர். கடந்தாண்டு முதல் இதுவரை போதுமான பணிகள் இல்லாததால் பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளனர். போதுமான புராஜெக்ட்கள் இல்லாமை, அதிக பணியாளர்கள் கையிருப்பு உள்ளிட்ட காரணிகளால் 20 ஆயிரம் பேர் சப்தமின்றி வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஐடி ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. 2024 தொடங்கி இதுவரை 3 ஆயிரம் பேர் சப்தமின்றி வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பணியில் இருந்து நீக்கப்படுகிறீர்கள் என்று ஒரு நிறுவனத்திடம் இருந்து கடிதம் பெற்ற பிறகு அந்த நபரால் வெளியில் வேலை தேடிக்கொள்வது மிகுந்த சிரமமாக இருக்கிறது. அதுவும் 30 நாட்களுக்குள் புதிய வேலை தேடிக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தம் இன்னும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறதாம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை தினசரி 10 முதல் 12 மணி நேரம் வரை ஐடி ஊழியர்களிடம் வேலை வாங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த அளவு இன்னும் அதிகரித்து 14 முதல் 16 மணி நேரமாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் காக்னிசண்ட், டெரா டேட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் மட்டுமின்றி அக்சென்சர், இன்போசிஸிலும் இந்த அமைதியான பணிநீக்கம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இப்படி பணிநீக்கம் செய்யப்படும் பெரும்பாலான ஊழியர்களிடம் தாங்களே ராஜினாமா செய்வதாக எழுதி வாங்கி அனுப்பப்படுவதுதான் உச்சகட்ட சோகம். போதுமான கிளையண்டுகள் இல்லாததும் இந்த மோசமான சூழலுக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவின் டாப் 5 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மட்டும் ஓராண்டில் 69ஆயிரத்து167 பேருக்கு வேலை பறிபோய் உள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் நடக்கும் முதல் நிகழ்வாகும்.