ஐடிசி ஹோட்டல்களுக்கு முக்கிய அமைப்பு ஒப்புதல்
பிரபல நிறுவனமான ஐடிசியில் இருந்து ஹோட்டல் பிரிவு மட்டும் தனியாக இயங்க இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ஐடிசி ஹோட்டல்ஸ் நிறுவனம் விரைவில் ஐடிசியில் இருந்து பிரிந்து தனியாக பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளது. 40 விழுக்காடு பங்குகளை ஐடிசி நிறுவனமும், மீதம் உள்ள 60 விழுக்காடு பங்குகளை பங்குதாரர்களும் கொண்டிருப்பார்கள். இந்தியாவில் ஐடிசி நிறுவன் பல வணிகங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஹோட்டல்கள், காகித அட்டை பெட்டி, காகிதங்கள், விவசாயம் சார்ந்த் பணிகள் இவற்றில் முக்கியமானவை. ஐடிசி நிறுவனத்தில் இருந்து ஹோட்டல் பிரிவு மட்டும் தனியாக பிரிக்கப் போவதாக கடந்தாண்டு ஜூலையில் ஐடிசி நிறுவனம் முடிவெடுத்தது. இந்த முடிவுக்கு ஐடிசி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது. 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐடிசி ஹோட்டல்ஸ் நிறுவனம், இந்தியாவில் 115 ஹோட்டல்களை , 6 பிராண்டு பெயர்களில் 80 இடங்களில் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.