30 நிமிட டெலிவரி திட்டம் கொண்டுவரும் ரிலையன்ஸ்..
30 நிமிடங்களில் பொருட்களை டெலிவரி செய்யும் புதிய திட்டத்தை ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் அடுத்த மாதம் முதல் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது வரை இந்தியாவில் பிளிங்கிட், செப்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் 10 நிமிடங்களில் பொருட்களை டெலிவரி செய்து வருகின்றன. இந்தியாவில் உள்ள 20 லட்சம் மளிகைக்கடைகளுடன் ரிலையன்ஸ் நிறுவனம் கூட்டணி வைத்திருக்கிறது. அவற்றை தொழில்நுட்ப ரீதியில் இணைக்க லோக்கஸ்-ஃபைன்ட் ஆகிய தளங்களுடன் ரிலையன்ஸ் கூட்டு வைத்துள்ளது. இந்த இரு தளங்கள் உதவியுடன் பொருட்களை 30 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. முதல் கட்டமாக காய்கனிகளை ரிலையன்ஸ் நிறுவனம் டெலிவரி செய்ய இருக்கிறது.
மின்சார பொருட்களையும் அடுத்தகட்டமாக டெலிவரி செய்யும் திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு ஜியோ மார்ட் எக்ஸ்பிரஸ் என்று நிறுவனத்துக்குள் பெயர் சூட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்கட்டமாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 8 நகரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதே பெயரில் கடந்தாண்டு நவி மும்பையில் திட்டத்தை ஜியோ செயல்படுத்தியது. நவிமும்பையில் திட்டம் தோல்வியில் முடிந்தாலும் பல நகரங்களில் விரைவில் பொருட்கள் டெலிவரி பெற விரும்பும் மக்கள் அதிகரித்துள்ளதால் அடுத்த 2 ஆண்டுகளில் இந்த துறை வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையில் இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்பட இருக்கிறது.