மின்சார ஜேஎல்ஆர் தமிழ்நாட்டில் தயாராகிறதா?
இந்தியாவில் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் டாடா மோட்டார்ஸ் அண்மையில் தனது சொகுசு கார் பிரிவான ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆலையை ராணிப்பேட்டை அருகே தொடங்க திட்டமிட்டது. இந்த நிலையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தில் மின்சார கார்கள் தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை விவரம் அறிந்தவர்கள் ஏறக்குறைய உறுதி செய்திருக்கின்றனர். எனினும் அதிகாரபூர்வ தகவல் வரவில்லை. ஏற்கனவே டாடா மோட்டார்ஸில் உள்ள மின்சார கட்டமைப்பைப் போலவே தமிழ்நாட்டின் ஆலையிலும் தயாராகி வருவதாக தகவல் கசிந்திருக்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் பிரெஞ்சு கார் நிறுவனமான சிட்ரோயன் எளிதாக வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்கிறது. இதே பாணியில்தான் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களும் இந்தியாவில் தயாராகும் என்று கூறப்படுகிறது. பிரிட்டனை பூர்விகமாக கொண்ட ஜாகுவார் லேண்ட் ரோவரை கடந்த 2008-ல் டாடா குழுமம் வாங்கியது. இதன்பிறகு வெளிநாடுகளில் இந்த வகை கார்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் டாடா மோட்டார்ஸின் ஜாகுவார் லேண்ட் ரோவரின் இந்திய வருகை அதன் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. மின்சார கார்கள் உற்பத்தியில் அடுத்தடுத்த நிறுவனங்கள் தமிழ்நாட்டுடன் கைகோர்த்துள்ள நிலையில் தமிழ்நாடு மாநிலம் உற்பத்தி கேந்திரமாக மாறியுள்ளது.