அதிகரிக்கும் டிஜிட்டல் பணமோசடி..
இந்தியாவில் கீரைக்கட்டு வாங்குவது முதல் கிலோ கணக்கில் நகை வாங்குவது வரை தொட்டதுக்கு எல்லாம் யுபிஐ, உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்று உருமாற்றம் நடந்துள்ளது. இந்நிலையில் 14.57 பில்லியன் ரூபாய் அளவுக்கு அதாவது ஓர் நிதியாண்டில் மட்டும் 5 மடங்கு டிஜிட்டல் நிதி மோசடி நடந்துள்ளதாக நாங்கள் சொல்லவில்லை, ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு யுபிஐ பணப்பரிவர்த்தனை முறை அறிமுகமானது முதல் அதன் வளர்ச்சி கடந்த இரண்டே ஆண்டுகளில் 137%அதிகரித்திருக்கிறது. 200 டிரில்லியன் ரூபாய் அளவுக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. அனைவரிடமும் இந்தியாவில் எளிதாக இணைய சேவையை அனுக முடிவதும், அனைத்து தரப்பினரும் டிஜிட்டல் பேமண்ட் வசதிகளை ஏற்றுக்கொண்டுள்ளதும் இந்த டிஜிட்டல் பணம் வளர முக்கிய காரணிகளாக இருக்கிறது என்றும் ரிசர்வ் வங்கி கூறுகிறது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளால் அதன் புகழ் தொடர்ந்து அதிகரித்தபடிதான் இருக்கிறது. அதே நேரம் இதனை பயன்படுத்தி திருட முயற்சிப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதிகரிக்கும் மோசடிகளை தடுக்கும் நோக்கில் நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மத்திய ரிசர்வ் வங்கி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி விளம்பரத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். டிஜிட்டல் மற்றும் கார்டுகள் மூலமாக திருடப்படும் தொகை மட்டும் 10.4விழுக்காடு என்கிறது ரிசர்வ் வங்கி.இது கடந்தாண்டைவிட 1.1%அதிகமாகும். வங்கிக்கணக்கு விவரங்களுக்கு பதிலாக யுபிஐ நுட்பம், பெயர் மற்றும் வங்கி விவரங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இது முற்றிலும் பாதுகாப்பாக கருதப்படுகிறது.
தற்போது வரை யுபிஐ வசதி இலவசமாக உள்ளது. சில அண்டை நாடுகளில் யுபிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அங்கு மட்டும் யுபிஐக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் அறிமுகமான யுபிஐ தற்போது படிப்படியாக பிற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.