அமரராஜா நிறுவனம் முதலீடு
பேட்டரி உற்பத்திக்கு பெயர் பெற்றது அமரராஜா நிறுவனம். இந்த நிறுவனம் இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. ஆசிட் பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களில் முதலிடத்தில் இருக்கும் இந்நிறுவனம், வாகனங்களுக்கு பேட்டரி தயாரிப்பதில் 67 விழுக்காடு பங்களிப்பை தந்துள்ளது. லெட்-ஆசிட் பேட்டரி உற்பத்தியில் இன்னும் அதிக கவனம் செலுத்தியும் வருகிறது. இதுமட்டுமின்றி லித்தியம் பேட்டரிகளை தயாரிக்கவும் அந்நிறுவனம் ஆர்வம்காட்டி வருகிறது. 2025-ல் 1,500 கோடி ரூபாய் அளவுக்கு லெட் ஆசிட் பேட்டரியும் மீதத் தொகையில் புதிய ஆற்றல் முதலீடுகளையும் செய்ய இருப்பதாக அந்நிறுவனத்தின் மூத்த நிதி அதிகாரி தெரிவித்துள்ளார். 2024 நிதியாண்டில் முதலீட்டு செலவாக அந்நிறுவனம் 800 கோடி ரூபாய் செய்துள்ளது. அந்நிறுவனம் தெலங்கானாவில் மிகப்பெரிய பேட்டரி ஆலையை கொண்டுள்ளது. 16ஜிகாவாட் செல் உற்பத்தி மற்றும் 5ஜிகாவாட் பேட்டரி பேக் நுட்பத்தை அடுத்த 10 ஆண்டுகளில் செய்ய திட்டமிட்டுள்ளது. 2025-26-ல் முதல்கட்ட மக்கள் பயன்பாட்டுக்கு பேட்டரிகள் வர இருக்கின்றன.நடப்பு காலாண்டின் இறுதியில், உள்ளூர் சார்ஜர்களையும் அந்நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. முதல்கட்டமாக 3 சக்கர வாகனங்களுக்கும், அதன் பிறகு இருசக்கர வாகனங்களுக்கும் சார்ஜர் தயாரிக்கப்பட இருக்கிறது. இந்தியாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், 16லட்சம் மின்சார வாகனங்கள் 2023-24 நிதியாண்டில் விற்கப்பட்டுள்ளன. இதே நேரம் எக்சைடு பேட்டரி நிறுவனமும் லித்தியம் அயன் செல் பேட்டரிகள் உற்பத்திக்கு ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கின்றன.
எக்சைடு நிறுவனம் 6ஜிகாவாட் அளவுக்கு லித்தியம் பேட்டரி செல்கள் உற்பத்தியை முதல்கட்டமாக செய்ய திட்டமிட்டுள்ளது.