அரைக்கடத்தி உற்பத்திக்கு சோஹோ விண்ணப்பம்..
உலகளவில் உள்ள பொருளாதார சங்கிலியை வலுப்படுத்தும் வகையில் சோஹோ நிறுவனம் புதிய அரைக்கடத்தி உற்பத்தி ஆலையை தொடங்க இருக்கிறது. இதற்காக மத்திய அரசிடம் விண்ணப்பித்து இருப்பதாக அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை சோஹோ நிறுவனம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கும் சோஹோ நிறுவனம் அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக இயங்கி வருகிறது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 4 அரைக்கடத்தி ஆலைகள் உள்ள நிலையில் 3 சிப் பேக்கேஜிங் நிறுவனங்களும், டாடாவின் ஒரு சிப் உற்பத்தி நிறுவனமும் மட்டுமே உள்ளது. கடந்த 2021 முதல் இந்தியாவில் செமிகண்டக்டர் எனப்படும் அரைக்கடத்தி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த ஆலைகளை தொடங்குவோருக்கு 76ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊக்கத் தொகையையும் அரசு அளித்தது. உலக நாடுகள் பலவற்றில் பணியாளர்களை பெரிய நிறுவனங்கள் வீட்டுக்கு அனுப்பும் நிலையில், இந்தியாவில் அந்த நிலை வரக்கூடாது என்பதற்காக புதிய ஆலையை தொடங்க இருப்பதாக வேம்பு குறிப்பிட்டுள்ளார். ஒரு நிறுவனத்தின் சொத்தே அதன் பணியாளர்கள்தான் என்பதை நிறுவனங்கள் உணரவேண்டும்,பெருந்தொற்று நேரத்துக்கு பிறகு சோஹோ நிறுவனத்தில் ஒரு நபரை கூட வேலையில் இருந்து நீக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தில் 15 ஆயிரம் பணியாளர்கள் இருக்கின்றனர். சோஹோ நிறுவனத்தில் 55 வகையான செயலிகள் உள்ளன. தமிழ்நாட்டில் குறிப்பாக கிராமபுறங்களில் மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய ஆலையை தொடங்க வேம்பு திட்டமிட்டுள்ளார்.
கிராமபுறங்களில் இருந்து நகரங்களை நோக்கி மக்கள் படையெடுக்கும் நிலையை தடுக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.