அட்டகாசப்படுத்தும் NVIDIA..
NVIDIAநிறுவனத்தின் முதலாளியான ஜென்சென் ஹுவாங்கின் சொத்துமதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது.
அவரின் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. ஜென்செனின் சொத்து மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை 106.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது. இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஜென்சென் தற்போது 13 ஆவது இடத்தில் இருக்கிறார். ஓராண்டில் மட்டும் இவரின் சொத்து மதிப்பு 62 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ள நிலையில் அது சார்ந்த சிப் உற்பத்தியில் NVIDIA நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 1993 ஆம் ஆண்டு சிப் தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கிய NVIDIA நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. மைக்கேல் டெல் என்ற பிரபல பணக்காரரை விடவும் ஜென்சென் தற்போது அதிக சொத்து வைத்திருக்கிறார்.
இன்டெல் மற்றும் ஏஎம்டி நிறுவனங்களுக்கு போட்டியாக வன்மற்றும் மென்பொருள் உற்பத்தியில் என்விடியா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை செயல்படுத்துவதில் இந்நிறுவனத்தின் சிப்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.செயற்கை நுண்ணறிவு ஆக்சலரேட்டர்களை ஆண்டுக்கு ஆண்டு உற்பத்தியை அதிகப்படுத்த உள்ளதாகவும் ஜென்சென் ஹுவாங் தெரிவித்துள்ளார்.