தங்கம் விலை சரிய காரணம் இதுதான்..
தங்கம் விலை சர்வதேச அளவில் செவ்வாய்க்கிழமை சரிந்தது. இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 2314 அமெரிக்க டாலர்களாக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை 3.5 விழுக்காடு வரை வீழ்ந்தது. கடந்த 2020ஆம் ஆண்டுக்கு பிறகு தங்கத்தின் விலை ஒரே நாளில் வீழ்ந்தது இதுவே அதிகபட்சமாகும். காரணிகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம். முதலாவதாக அமெரிக்காவில் வலுவான வேலைவாய்ப்புகள் குறித்த அரசு புள்ளி விவரங்கள் வெளியாகின. இதேபோல் சீனாவின் மத்திய வங்கியும் தங்கம் வாங்கிக்குவிக்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கடன்கள் மீதான வட்டி விகிதங்களை குறைக்கும் வாய்ப்பு மிகமிக குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவும் தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பணவீக்க குறியீட்டு விவரம் விலையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க கடன் பத்திரங்கள் நல்ல லாபம் ஈட்டி வரும் நிலையில் தங்கத்தை விற்று பணமாக்க முதலீட்டாளர்கள் விரும்புவார்கள் என்பதால் தங்கம் விலை வரும் நாட்களில் மேலும் குறையவும் வாய்ப்புள்ளது. இந்தாண்டு கடன்கள் மீதான வட்டியை அமெரிக்க பெடரல் ரிசர்வ் குறைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில் வேலைவாய்ப்பு விகிதங்கள் சீராக உள்ள நிலையில், கடன்கள் மீதான வட்டியை குறைத்தால் அது தங்கத்தின் மீதான முதலீடாக மாறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.