வருமான வரி சலுகை வரம்பில் மாற்றமா?
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு புதிய உத்திகளை பயன்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வருமான வரியில் சலுகை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிய வருமான வரி செலுத்தும் முறையில் 3 லட்சத்துக்கு பதிலாக 5 லட்சம் ரூபாய் வரை வரியே செலுத்தத் தேவையில்லை என்ற புதிய அறிவிப்பு முழுநீள பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு பட்ஜெட் அடுத்தமாத பாதியில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.குறைவான வருமானம் இருக்கும் மக்களுக்கு இந்த சலுகைகளை மத்திய அரசு அளிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்., புதிய திட்டம் அமலாகும்பட்சத்தில் 10ஆயிரத்து 400 ரூபாய் வரை வரி குறைய வாய்ப்புள்ளது. 7.6லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் 50லட்சத்தில் இருந்து 1 கோடி ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 11,440 ரூபாய் வரி சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் 1 கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 11,960 ரூபாய் சலுகை கிடைக்க உள்ளது. 2 கோடி அல்லது அதற்கும் மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 13 ஆயிரம் ரூபாய் சலுகை கிடைக்க இருக்கிறது. அதிகம் சேமிக்காமல் செலவு செய்வதும், முதலீடு செய்வதும் பொருளாதாரத்துக்கு உதவும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பழைய வரி செலுத்தும் முறையில் வீட்டு வாடகை உள்ளிட்ட அம்சங்களுக்கு சலுகைகள் கிடைக்கின்றன. 2020ஆம் ஆண்டு பட்ஜெட்டில், வருமான வரி செலுத்துவதில் பழைய முறையா இல்லை புதிய முறையா என்று தேர்வு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகம் செலவு செய்யும்போது பொருளாதார நடவடிக்கை மேம்படும் என்று கூறப்படுகிறது. உலகிலேயே அதிக உள்நாட்டு உற்பத்தி கொண்ட நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. 2024 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதமாக 8.2 விழுக்காடு வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.