கொள்கைகளை மாற்றினால் எப்படி என ஹியூண்டாய் கேள்வி…
பிரபல கார் நிறுவனமான ஹியூண்டாய் கார் நிறுவனம் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஐபிஓ எனப்படும் ஆரம்ப பங்கு வெளியீடு மூலம் திரட்ட திட்டமிட்டது. மொத்தம் 17 விழுக்காடு பங்குகளை இந்தியாவில் பங்குச்சந்தைகள் வாயிலாக நிதி திரட்ட திட்டம் தயாராக இருக்கிறது. இந்நிலையில் தொடர்ந்து அரசாங்கம் தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டே வருவதால் ஹியூண்டாய் நிறுவனம் அதிருப்தி அடைந்திருக்கிறது. இந்தியாவில் கடந்த 1996 ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் ஹியூண்டாய் நிறுவனம் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தனது கார் ஆலையை தொடங்கியது. இந்நிலையில் மத்திய அரசு நிலையான ஒரு கொள்கையை வைக்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. கொள்கைகளை மாற்றிக்கொண்டே வந்தால் அது தொழில்நுட்ப அப்டேட்களை பாதிக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும் அது முதலீடுகளையும் பாதிப்பதாகவும் ஹியூண்டாய் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 32 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் பெரும்பாலும் மின்சார வாகனங்களே. இதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு, பசுமை உற்பத்தி உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
மின்சார கார்களே தங்கள் பிரதான இலக்காக இருப்பதாக ஹியூண்டாய் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிற்குள் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு செய்து வந்தாலும் வெளிப்படைத்தன்மையுடன் எளிதான கொள்கைகள் இருந்தால்தான் இந்தியாவிற்குள்ளேயே கார்களை தயாரிக்க முடியும் என்றும் , இந்தியாவிற்குள் மின்சார கார்கள் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கு அதிக கட்டமைப்பு தேவை என்றும், பேட்டரி பேக்குகள், பவர் எலெக்டாரானிக்ஸ் உள்ளிட்ட கட்டமைப்பை உள்ளூரிலேயே தொடர்பு சங்கிலியும் அமைக்க வேண்டும் என்கிறது ஹியூண்டாய்