டாடா மோட்டார்ஸ் இரண்டானது ஏன்?
இந்தியாவில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அண்மையில் வணிக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள் என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. இந்த பிரிவு குறித்து டாடா சன்ஸ் குழுமத்தலைவர் சந்திர சேகரன் கருத்து தெரிவித்துள்ளார். 79 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்த பிரிவு என்பது வணிகத்தின் அனைத்து வகைகளிலும் போட்டியை அதிகமாக்கவே நடந்தது என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த பிரிவு முடிவு என்பது சிறப்பான வளர்ச்சியை எட்ட உதவியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதத்தில் இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. வணிக வாகனங்கள் மற்றும் அது சார்ந்த முதலீடுகள் ஒரு பிரிவாகவும், பயணிகள் வாகனங்கள் குறிப்பாக மின்சார வாகனங்கள் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் தொடர்பான பணிகள் தனிப்பிரிவாகவும் மாற்றப்பட்டுள்ளது. பங்குதாரர்களுக்கு நன்றி தெரிவித்த சந்திர சேகரன், சிறப்பான சந்தை இடம், பிராண்டின் வலிமை மற்றும் வளர்ச்சியை எட்ட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். தனித்தனியாக பிரிக்கப்பட்டதால் கடந்த 2021 முதல் 3 வணிகங்களும் தனித்தனியாக சுதந்திரமாக செயல்படுவதாகவும், அந்தந்த பிரிவுகளுக்கு தனித்தனியாக தலைமை செயல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதையும் சந்திரசேகரன் சுட்டிக்காட்டினார். புதிய மின்சார வாகனங்கள், சந்தை வளர்ச்சி நடவடிக்கை மற்றும் சார்ஜிங் நெட்வொர்க் உள்ளிட்டவற்றை தொடர்ந்து அறிமுகப்படுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த 3 ஆண்டுகளில் பல புதிய கார்கள் வர இருப்பதாகவும், ஜாகுவார் லேண்ட்ரோவருக்கு அதிக முதலீடுகள் செய்ய இருப்பதாகவும் கூறிய அவர், கார் உதிரிபாகங்கள் , டிஜிட்டல் மற்றும், ஸ்மார்ட்டான சில விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.