பிரேசிலில் ஆலையை திறந்த பஜாஜ் ஆட்டோ..
இந்தியாவில் இருந்து அதிக ஆட்டோக்கள், பைக்குகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக பஜாஜ் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் பிரேசிலின் மனாவுஸ் நகரில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கியிருக்கிறது. இந்தியாவைவிட்டு வெளிநாட்டில் பஜாஜ் நிறுவனம் நிறுவும் புதிய முதல் ஆலை இதுவாகும். மொத்தம் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பஜாஜ் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டாலும் உற்பத்தி ஆலை பிரேசிலில்தான் அமைந்திருக்கிறது. ஆண்டுக்கு 20 ஆயிரம் பைக்குகளை உற்பத்தி செய்யும் வகையில் 9600 சதுர மீட்டர் அளவில் இந்த ஆலை அமைந்திருக்கிறது. படிப்படியாக இது ஆண்டுக்கு 50 ஆயிரம் பைக்குகளை உற்பத்தி செய்ய பஜாஜ் நிறுவனம்திட்டமிட்டுள்ளது. பிரேசிலில் டாமினர் வகையும் பின்னர் பல்சர் வகை பைக்குகளும் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. பிரேசிலில் ஏற்கனவே கேடிஎம் வகை பைக்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த நிறுவனத்திலும் பஜாஜ் நிறுவனத்தின் 48 விழுக்காடு பங்குகள் இருக்கின்றன. இதேபோல் டிரியம்ப் வகை மோட்டர் சைக்கிள்களும் பஜாஜ் நிறுவன கூட்டு விற்பனையில் உள்ளது. 2028-ல் பிரேசிலின் வாகன சந்தை கணிசமாக உயரும் என்றும் அந்நாட்டில் 2 கோடியே 37 லட்சம் பைக்குகள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி 2023-28 காலகட்டத்தில் 14.2% அளவுக்கு வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.