சீன நிறுவனத்துடன் அம்பானி டீல்?
சீனாவைச் சேர்ந்த ஃபேஷன் நிறுவனமான shein இந்தியாவில் கால்பதிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீட்டெயில் வென்சர்ஸ் நிறுவனம் இந்த சீன நிறுவனத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்து சீன நிறுவனம் கடைகளை திறக்க இருக்கிறது. குறிப்பிட்ட சீன நிறுவனம், ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கும் திட்டமிட்டுள்ளது. மெட்டாவின் முன்னாள் இயக்குநர் மனீஷ் சோப்ராவை களமிறக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவின் டிஃபானி, பிரிட்டனின் ASOs ஆகிய நிறுவன தயாரிப்புகளை ரிலையன்ஸ் தனது ரீட்டெயில் பிரிவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 2020-ல் எல்லையில் மோதல் ஏற்பட்டபோது shein நிறுவனம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. தற்போது 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ரிலையன்ஸ் என்ற பிரபலமான பிராண்டின் கீழ் சீன நிறுவனம் நாட்டுக்குள் அடியெடுத்து வைக்க இருக்கிறது. நாட்டில் உள்ள முக்கியமான ரகசியமான அடிப்படை தகவல்களும் இந்தியாவிலேயே சேமித்து வைக்கவும் இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவில் shein நிறுவனம் அறிமுகமாகிவிட்டால் அமெரிக்காவின் வால்மார்ட்டுக்கு போட்டியாகவும், வால்மார்ட் வாங்கிய மிந்த்ரா மற்றும் டாடாவின் வெஸ்ட் சைடு நிறுவனங்களுக்கு போட்டியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேஷன் சந்தை 2031 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.