அரசு தலையிடாதாம்..
சிம்கார்டு சேவை வழங்கும் நிறுவனங்கள் அண்மையில் தங்கள் இஷ்டத்துக்கு விலையை உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்களுக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விலையேற்றத்தில் அரசோ, தொலை தொடர்பு ஒழுங்குமுறை அமைப்போ தலையிடாது என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இத்தனை விலை உயர்ந்தபோதிலும் உலகத்திலேயே இந்தியாவில்தான் தொலை தொடர்பு சேவை கட்டணங்கள் குறைவு என்றும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. பிரச்சனையில் தலையிட மாட்டோம் என அரசு தரப்பு தெரிவித்துவிட்ட போதிலும் தனியார் நிறுவனங்கள் தரமான தொலைதொடர்பு சேவைகளை தரவேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போதைய நிலை சீராக இருப்பதாகவும், அரசின் தலையீடு ஏதும் தற்போதைக்கு தேவைப்படாது என்றும் முக்கிய அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். விலையேற்றம் அதிகம் என்று மக்கள் தெரிவித்தாலும் 3 ஆண்டுகளாக விலையேறவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் குறிப்பாக நகர்ப்பகுதியில் செல்போன் சிம்கார்டுகளை மக்கள் பயன்படுத்தும் அளவு என்பது மேலும் 2.8 விழுக்காடு கூடுதல் செலவை மக்களுக்கு ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஆம் நிதியாண்டில் இது 2.7%ஆக இருந்தது. அதேநேரம் கிராமங்களில் மக்களின் செலவழிக்கும் விகிதம் 4.5%-ல் இருந்து 4.7%ஆக உயரும் என்றும் கூறப்படுகிறது. 5ஜி அலைக்கற்றைக்காக பல கோடி ரூபாயை நிறுவனங்கள் செலவிட்டுள்ள நிலையில் சிறிய அளவு மட்டுமே தற்போது விலையேற்றப்படுவதாக நிறுவனங்கள் தரப்பு விளக்கம் தருகின்றன. நிலைமை இப்படி இருக்கையில் தனியார் செல்போன் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பார்க்கும்போது, தங்கள் நிறுவனத்தில் மட்டும் ஏன் இன்னும் 4ஜி, 5ஜி சேவை வழங்கவில்லை என்று பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் சங்கம் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இப்படி ஒரு பிரச்சனை போகும் நிலையில் சிம்கார்டு நிறுவனங்களின் சேவைகள் தரமாக இருக்கிறதா என்பதை மட்டுமே தங்களால் பார்க்க முடியும் என்று டிராய் விளக்கம் தெரிவிக்கிறது.