ஏ2பி யின் எக்சலன்ட் திட்டம்…
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சைவ உணவகமான அடையார் ஆனந்த பவன், தனியார் ஈக்விட்டி மூலம் ஆயிரம் முதல் ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. தன் வசம் இருக்கும் 35 விழுக்காடு பங்குகளை விற்று இந்த நிதியை அந்நிறுவனம் திரட்ட இருக்கிறது. அடையார் ஆனந்த பவன் ஹோட்டலின் மொத்த மதிப்பு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் இருந்து இந்த உணவகத்தின் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டப்படுவதாக கூறப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு சென்னை அடையாரில் தொடங்கப்பட்ட இந்த உணவகம், தற்போது 150 கிளைகளை நாடு முழுவதும் திறந்துள்ளது. தெலங்கானா, கர்நாடகம், புது டெல்லி உள்ளிட்ட இடங்களிலும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் அடையார் ஆனந்த பவன் உணவு நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனம் தனது வணிகத்தை மேம்படுத்தும் வகையில் ஆரம்ப பங்கு வெளியிடவும் திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் புதிதாக 400 முதல் 500 கடைகளை இந்தியா முழுவதும் திறக்கவும் அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.