34 லட்சம் பேர் புதிதாக சேர்ப்பு..
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கடந்த மே மாதம் கணிசமான அளவுக்கு வாடிக்கையாளர்களை பெற்றுள்ளனர். அதே நேரம் ஏற்கனவே தேய்ந்து கொண்டிருக்கும் வோடஃபோனுக்கு மேலும் சறுக்கல் இருந்து வருவதாகவும் டிராய் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கடந்த மேமாதம் மட்டும் ஜியோவுக்கு 20லட்சத்து 19 ஆயிரம் பேர் புதிதாக வாடிக்கையாளர்களாக சேர்ந்துள்ளனர். இதனால் ஜியோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 47 கோடியே 46 லட்சமாக உயர்ந்திருக்கிறது. அதே நேரம் ஏர்டெல் நிறுவனத்துக்கு குறிப்பிட்ட காலகட்டத்தில் 12லட்சத்து 50 ஆயிரம் வாடிக்கையாளர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இந்நிலையில் வோடஃபோன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 9 லட்சத்து 24 ஆயிரம் பேரை அந்நிறுவனம் மே மாதத்தில் இழந்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 21 கோடியே 81 லட்சமாக குறைந்திருக்கிறது. செல்போன் எண்களை ஒரு நிறுவனத்திடம் இருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாற்றுவதற்காக 97கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவில் பிராட்பேண்ட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 93கோடியே 50 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் டிராய் அறிவித்துள்ளது.