அலைக்கற்றை ஏலம் எடுத்ததற்கு பணம் கேட்கும் மத்திய அரசு..
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது மத்திய தொலைதொடர்புத்துறை , இந்த துறை கடந்த மாதம் அலைக்கற்றை ஏலம் நடத்தியது. இந்த ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்களிடம் இருந்து பணத்தை தற்போது தொலைதொடர்புத்துறை பணம் கேட்டு வருகிறது. ஏர்டெல், ஜியோ மற்றும் வோடஃபோன் நிறுவனங்களுக்கு இது தொடர்பாக நோட்டீசும் அளிக்கப்படுகிறது. இந்த நோட்டீஸ் கிடைத்ததில் இருந்து 10 நாட்களுக்குள் பணம் தரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு வகைகளில் பணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் முழு தொகை செலுத்தலாம் அல்லது பாதி பணம் இப்போதும் மீதி தொகை 2 ஆண்டுகளுக்குள் கட்டவும் வகை செய்யப்பட்டுள்ளது. 20 தவணைகளில் செலுத்தும் இரண்டாவது முறையும் கவனம் பெற்றுள்ளது. ஆனால் அதே நேரம் 20 தவணைகளில் செலுத்தினால் அதற்கு உண்டான வட்டியும் சேர்த்து செலுத்த நேரிடலாம். கடந்த மாதம் நடந்த அலைக்கற்றை ஏலத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனம் 97 மெகாஹர்ட்ஸ் அளவுள்ள 5ஜி அலைக்கற்றைகளை 6,856 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இதேபோல் வோடஃபோன் நிறுவனம் 30 மெகாஹர்ட்ஸ் அளவுள்ள 5ஜி சேவைகளை 3510 கோடிரூபாய்க்கு முதலீடு செய்துள்ளது. அதே நேரம் மிகக்குறைவான தொகையாக ஜியோ நிறுவனம் 973 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது. பணம் செலுத்தியதில் இருந்து 30 நாட்களுக்குள் அவர்களுக்கான அலைக்கற்றை ஒதுக்கப்பட இருக்கிறது. இரண்டாவது முறையாக 11,340 கோடி ரூபாய்க்கு நடந்த அலைக்கற்றை ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம்தான் அதிக தொகைக்கு அலைக்கற்றை ஏலத்தை எடுத்துள்ளது.