தங்க வியாபாரிகளை ஏங்க வைக்கும் பட்ஜெட்..
இந்தியாவிலேயே தங்கத்தின் நுகர்வை அதிகரிக்க வைக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தீட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் வரியை குறைக்க வேண்டும் என்று தங்க நகை விற்பனையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இறக்குமதி வரி அதிகரிப்பு காரணமாக தங்கக் கடத்தல் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்ட கட்டிகள் இறக்குமதிக்கு வரியை குறைக்க வேண்டும் என்று கோரும் தனியார் நகைக்கடை உரிமையாளர்கள், இந்தியாவில் நகையாக செய்து பின்னர் அதை ஏற்றுமதி செய்ய பேருதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் பட்ஜெட்டில் வருவாய், மற்றும் உள்கட்டமைப்புகளில் மேம்பாடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் தொழில்அதிபர்கள், வரிகள் குறைந்தால் மக்கள் தங்கத்தை அதிகம் வாங்குவார்கள் என்பதும் நகைக்கடைக்காரர்களின் வாதமாக உள்ளது. 2 முதல் 3 விழுக்காடு இறக்குமதி வரி குறைத்தால் பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 2 லட்சம் ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்கும்போது தற்போது பேன் கார்டு பயன்படுத்தப்படும் நிலையில் இதனை 4 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஏனெனில் 2 லட்சம் ரூபாய் என்ற உச்சவரம்பை நிர்ணயித்தே 5 ஆண்டுகள் ஆவதாகவும், அப்போது இருந்த தங்கம் விலையும் இப்போது உள்ள தங்கம் விலையும் பெரிய வித்தியாசம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு தேவையில்லாத தொல்லைகளை இது தவிர்க்கும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக உள்ளது.