டெபாசிட் சரிவு – சக்திகாந்ததாஸ் கூறுவது என்ன?
கடன் மற்றும் டெபாசிட் இடையே வங்கிகளில் அதிகரித்து வரும் இடைவெளி குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மக்களின் சேமிப்புகள் வழக்கமான டெபாசிட்டில் இருந்து குறைந்து வரும் நிலையில் புதுப்புது உத்திகளை பயன்படுத்தி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், ரிஸ்குகளை சிறப்பாக கையாளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சக்தி காந்ததாஸ், பொதுமக்களின் டெபாசிட்கள் சந்தை மூலதனங்களாகவும், நிதி நிறுவனங்களுக்கும் செல்வதாக குறிப்பிட்டு பேசினார். மக்கள் இப்போதெல்லாம் வழக்கமான சேமிப்புகளுக்கு பதிலாக பரஸ்பர நிதி, காப்பீட்டு திட்டங்கள், பென்ஷன் திட்டங்களில் அதிக தொகையை செலுத்துவதாகவும் சக்தி காந்ததாஸ் எச்சரித்துள்ளார். கடன் விகிதங்களை வங்கிகள் தான் நிரப்ப வேண்டும் என்றும், குறுகிய கால கடன்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நிதி பயன்பாட்டில் கவனம் தேவை என்று கூறிய அவர், கடந்தாண்டு வளர்ந்த பொருளாதார நாடுகளே தடுமாறியதையும் சுட்டிக்காட்டினார். அதிகரித்து வரும்டிஜிட்டல் பரிவர்த்தனை காரணமாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பாதுகாப்புகளில் வங்கிகள் அதிகம் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். டிஜிட்டல் வகையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை பிடிக்க அமலாக்க முகமைகள் துரிதமாக செயல்படவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.