48 விழுக்காடு சரிந்த வீட்டு சேமிப்புகள்…
இந்தியாவில் வீடுகளில் 48 விழுக்காடு சேமிப்புகள் சரிந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது. 21 ஆயிரம் பேரிடம் 327 மாவட்டங்களுக்கு சென்ற குழு இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இதில் 67 விழுக்காடு மக்கள் ஆண்கள், மீதம் உள்ளவர்கள் பெண்கள். இதில் 44 விழுக்காடு மக்கள் முதல் தர பெரிய நகரங்களில் வசிப்பவர்கள், 32 விழுக்காடு மக்கள் 2 ஆம் தரத்திலும், மீதமுள்ள 24 விழுக்காடு 3 மற்றும் 4 ஆம் தர நகரங்கள் மற்றும் கிராம புறங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த ஆய்வில் வாழ்வதற்கு தேவையான பணத்தின் தேவை அதிகளவில் இருப்பதாகவும், வீட்டின் மொத்த வருவாயை விட தேவை அதிகமாக உள்ளதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே உள்ள சொத்துகள் மற்றும் நகைகளை பலர் அடகு வைத்திருப்பதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
பெரும்பாலானவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்லூரி கல்விக்கு கடன் வாங்கியது தெரியவந்துள்ளது. இதில் 15 விழுக்காடு பேரின் வீட்டு சேமிப்பு 25 விழுக்காடு வரை குறைந்திருப்பதாகவும், 7 விழுக்காடு பேர் 25 விழுக்காடுக்கும் அதிகமாக சேமிப்பு குறைந்துள்ளதாக கூறியுள்ளனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிலையில் வரிகள் குறைக்கப்படுமா என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 80சி, ஜீரோ டேக்ஸ் உள்ளிட்டவை மக்கள் எதிர்பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் பணவீக்க விகிதம் 5.08விழுக்காடாக ஜூன் மாதத்தில் இருக்கிறது. அதிகரிக்கும் விலைவாசி உயர்வில் உணவுப்பொருட்கள் சார்ந்த விலையேற்றம்தான் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. இது நாட்டின் வாடிக்கையாளர் பணவீக்கத்தில் 40 விழுக்காடாக உள்ளது.